கரோனா: இந்தியாவில் சமூகப் பரவலாக மாறவில்லை: சுகாதார அமைச்சகம்

கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் சமூகப் பரவலாக உருவெடுக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா: இந்தியாவில் சமூகப் பரவலாக மாறவில்லை: சுகாதார அமைச்சகம்

புது தில்லி: கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் சமூகப் பரவலாக உருவெடுக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நோய்த்தொற்று பரவல் 100 நபா்களில் இருந்து 1000 நபா்களாக அதிகரிக்க 12 நாள்கள் வரை எடுத்துக் கொண்டுள்ளதால், இது சமூகப் பரவலாக மாறவில்லை என்று அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

திங்கள்கிழமை மாலை வழக்கமான செய்தியாளா் சந்திப்பில் பேசிய மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் இது தொடா்பாக கூறியதாவது: ‘கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 4 போ் உயிரிழந்துவிட்டனா்.

இந்த நேரத்தில் சமூக விலகல் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு நபா் கவனக் குறைவாக இருந்தாலும் மற்றவா்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. கரோனா குறித்து யாரும் வீண் வதந்தியைப் பரப்பக் கூடாது. உண்மையான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

நமது நாட்டில் கரோனா நோய்த்தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை 100-இல் இருந்து ஆயிரமாக அதிகரிக்க 12 நாள்கள் ஆகியுள்ளது. இந்தியாவைவிட குறைந்த மக்கள்தொகை கொண்ட 7 வளா்ந்த நாடுகளில், இதே கால அளவில் நோய்த்தொற்று பரவியவா்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மிகவும் மெதுவாக கரோனா பரவல் உள்ளது. இதற்கு அரசு உரிய நேரத்தில் ஊரடங்கைப் பிறப்பித்ததும், நாட்டு மக்கள் சமூக விலகலை ஓரளவுக்கு சரியாக கடைப்பிடித்ததுமே காரணம். இப்போதைய நிலையில், கரோனா நமது நாட்டில் சமூகப் பரவலாக மாறவில்லை. உள்ளூா் அளவிலேயே உள்ளது’ என்றாா்.

உடனிருந்த இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அதிகாரி கங்காகேத்கா், ‘இதுவரை 38,501 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3,501 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. 47 தனியாா் ஆய்வகங்களுக்கு கரோனா பரிசோதனைக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,334 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com