கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு

இந்தியாவில் கரோனா பாதிக்கும் அபாயம் இருக்கும், அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு

புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதிக்கும் அபாயம் இருக்கும், அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகத்தின் ஈரோடு இடம் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் இதுவரை 1,250 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 32 பேர் கரோனா பாதித்து பலியாகியுள்ளனர். 102 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

இந்த நிலையில், இந்தியாவில் கரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்களை மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

அவையாவன..

1. ஈரோடு, தமிழ்நாடு
2. தில்ஷாத் கார்டன், தில்லி
3. நிஜாமுதீன், தில்லி
4. பத்தனம்திட்டா, கேரளம்
5. காசர்கோடு, கேரளம்
6. நொய்டா, உத்தரப்பிரதேசம்
7. மீரட், உத்தரப்பிரதேசம்
8. பில்வாரா, ராஜஸ்தான்
9. ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
10. மும்பை, மகாராஷ்டிரம்
11. புணே, மகாராஷ்டிரம்
12. ஆமதாபாத், குஜராத்
13. இந்தூர், மத்தியப் பிரதேசம்
14. நவன்ஷஹர், பஞ்சாப்
15. பெங்களூரு, கர்நாடகம்
16. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்


இந்த 16 இடங்களிலும், கரோனா நோயாளிகள் அதிகம் பேர் கண்டறியப்பட்டதுவே, இவை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய பகுதிகளாகக் கண்டறியப்படக் காரணமாக உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த நோயினால் இந்த மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. 

இது மட்டுமல்லாமல் ஈரோட்டில் 16,456 குடும்பங்களைச் சார்ந்த 57,734 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க் கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.  கடந்த 11 ஆம் தேதி தாய்லாந்து நாட்டில் இருந்து 7 நபர்கள் ஈரோட்டிற்கு வந்து சுல்தான்பேட்டை மசூதியில் தங்கியிருந்தனர். இந்த நபர்கள் 14 ஆம் தேதி முதல் கொல்லம் பாளையம் மசூதியில் தங்கியிருந்தனர்.

இதனையடுத்து அங்குத் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 நபர்கள் 16 ஆம் தேதி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களது ரத்த மாதிரியைச் சோதனை செய்ததில் 2 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 82 நபர்கள் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அதில் 28 ஆம் தேதி வரை 6 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று 4 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்று மேலும் 10 நபர்களுக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 20 நபர்களுக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com