கடனுக்கான மாதத் தவணைகள் 3 மாதத்துக்கு நிறுத்திவைப்பு: வங்கிகள் அறிவிப்பு

கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கடன்களுக்கான மாதத் தவணைகளை 3 மாதத்துக்கு நிறுத்திவைப்பது தொடர்பாக பொதுத் துறை வங்கிகள் சில தங்களது டிவிட்டர் பக்கத்தில் இன்று அறிவிப்பு
கடனுக்கான மாதத் தவணைகள் 3 மாதத்துக்கு நிறுத்திவைப்பு: வங்கிகள் அறிவிப்பு


புது தில்லி: கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கடன்களுக்கான மாதத் தவணைகளை 3 மாதங்களுக்கு நிறுத்திவைப்பது தொடர்பாக பொதுத் துறை வங்கிகள் சில தங்களது டிவிட்டர் பக்கத்தில் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

கடன்களுக்கான மாதத் தவணைகளை 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்க வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்திருந்த நிலையில், பொதுத் துறை வங்கிகள் அது பற்றிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளன.

வங்கிகள் வழங்கிய வீடு, வாகனம், பயிர்க்கடன்களுக்கான மாதத் தவணைகளை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைப்பது தொடர்பான  தகவல்களை தங்களது வங்கிக் கிளைகளுக்கு தெரிவித்திருப்பதாகவும், இதற்கான வழிகாட்டுதல்களை மேற்கொள்ளும்படியும் அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் வங்கி

அனைத்து வகையான கடன்களுக்கான தவணைகளையும் நிறுத்தி வைப்பதாக தங்களது அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் தெரிவித்திருப்பதாக இந்திய யூனியன் வங்கியின் மேலாண் இயக்குநர் ராஜ்கிரண் ராய் தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கி அளிக்கும் இந்த வாய்ப்பை வாடிக்கையாளர் பயன்படுத்திக் கொள்வது குறித்து மின்னஞ்சல் அல்லது டிஜிட்டல் முறையில் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாதத் தவணையை வங்கிகள் தாங்களாகவே நிறுத்த முடியாது. எனவே, வாடிக்கையாளர்தான் இந்த வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வங்கியிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஒருவேளை, ஒரு வாடிக்கையாளரின் ஊதியம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்றால், அவர் திட்டமிட்டபடி தவணையைச் செலுத்த ஊக்குவிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியன் வங்கி
ஆர்பிஐ-யின் அனுமதியை அடுத்து, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், இந்தியன் வங்கியும் 3 மாதங்களுக்கு கடன் தவணைகளை நிறுத்திவைத்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி
மேலும் ஒரு பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மார்ச், ஏப்ரல், மே மாத கடன் தவணைகளை நிறுத்தி வைப்பதாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. 

கனரா வங்கி

கரோனா பரவல் காரணமாக, கடன் தவணைகளை நிறுத்தி வைக்க ஆர்பிஐ அனுமதி அளித்திருப்பதை அடுத்து, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை அனைத்துக் கடன்களுக்கான தவணைகளும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவல் தீவிரமடைந்து வருகிறது. நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக சுற்றுலாத் துறை, தொழில்துறை உள்ளிட்டவை முடங்கியுள்ளன.

அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதனால், தினக் கூலித் தொழிலாளா்கள், தற்காலிகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் வருமானம் ஏதுமின்றி கடும் துன்பத்தைச் சந்தித்து வருகின்றனா்.

இந்தச் சூழலில் இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் கடந்த வாரம் நடைபெற்றது. 

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவித்த ஆர்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ், மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன்களுக்கான மாதத் தவணைகளை 3 மாதங்களுக்கு நிறுத்திவைப்பது தொடா்பான முடிவுகளை எடுக்க அனைத்து வங்கிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com