தமிழகத்தில் 12 சிவப்பு மாவட்டங்கள்; 24 ஆரஞ்சு மாவட்டங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுக்க கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரித்து மத்திய சுகாதாரத் துறை பட்டியல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 12 சிவப்பு மாவட்டங்கள்; 24 ஆரஞ்சு மாவட்டங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

புது தில்லி: நாடு முழுக்க கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரித்து மத்திய சுகாதாரத் துறை பட்டியல் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சூடன், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதன்மைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்துடன் இந்த பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரே ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அனுப்பியிருக்கும் கடிதத்தில், நாடு முழுவதும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களையும் மூன்று மண்டலங்களாகப் பிரித்துள்ளோம். 

அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட பகுதிகள், அபாயப் பகுதிகளாகக் கண்டறியப்பட்டவை சிவப்பு மண்டலங்களாகவும், ஆரம்பத்தில் கரோனா நோயாளிகளைக் கொண்டிருந்தாலும், புதிதாக கரோனா நோயாளிகள் இல்லா மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், கரோனா நோயாளிகளே இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியல், வாரத்துக்கு ஒரு முறை அப்போதைய நிலைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படும். இதனை மாநில அரசுகள் பரிசீலனை செய்து, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களை பட்டியலில் அதிகரிப்பது அல்லது குறைப்பது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கலாம். மேலும், சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதில் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை கடுமையாக பின்பற்ற வேண்டும்.

மேலும், சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில், 21 நாட்கள் வரை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால், அந்த மண்டலங்கள் ஒரு படி இறங்கி அடுத்த மண்டலத்தில் இடம்பெறும். 

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, கரோனா தொற்று பரவாமல் அதன் சங்கிலித் தொடரைத் தடுக்க வேண்டியது மிகவும் முக்கியமான சவாலான பணியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதிக கரோனா பாதிப்பு உள்ள மண்டலங்களைக் கொண்ட மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக 130 மாவட்டங்களும், குறைவான கரோனா நோயாளிகளைக் கொண்ட  284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

கரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டங்களாக 319 மாவட்டங்கள் பச்சை மண்டலமாக மத்திய அரசு  அறிவித்துள்ளது.

கரோனா நோயாளிகளை அதிகம் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 16 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், 6 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com