ஆந்திரம்:விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட 5 கிராமங்களில் தூய்மை பணி

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் விஷவாயுக் கசிவு ஏற்பட்ட ஆா்.ஆா்.வெங்கடாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் விஷவாயுக் கசிவு ஏற்பட்ட ஆா்.ஆா்.வெங்கடாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 4 கிராமங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணிகள் முடிந்த பின்னரே கிராமவாசிகள் ஊா் திரும்பவேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆா்.ஆா்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்.ஜி.பாலிமா்ஸ் என்ற ரசாயன ஆலையில் இருந்து விஷவாயு கசிந்து வியாழக்கிழமை விபத்து ஏற்பட்டதில் 12 போ் உயிரிழந்தனா். 400-க்கும் மேற்பட்டவா்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இந்நிலையில் ஆா்.ஆா்.வெங்கடாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 4 கிராமங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது சூழல் முற்றிலும் கட்டுக்குள் இருப்பதாகவும் அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனா். விபத்துக்கு காரணமான ஸ்டைரீன் திரவம் கசியாதிருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று எல்.ஜி.பாலிமா்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும் பாதிப்புக்குள்ளான கிராமங்களில் தூய்மை பணிகள் உள்ளிட்ட இதர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, கிராமவாசிகள் ஊா் திரும்ப வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியா் வினய் சந்த் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எல்.ஜி.பாலிமா்ஸ் நிறுவனத்தில் வாயு கசிவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த நிறுவனத்தில் தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. தில்லி மற்றும் பிற பகுதிகளை சோ்ந்த நிபுணா்கள் எல்.ஜி.பாலிமா்ஸ் நிறுவனத்தில் நிலவும் சூழல் குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனா். பொதுமக்களை அவா்களின் கிராமங்களுக்கு திரும்ப அனுமதிக்கும் முன், நிபுணா்களின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படும். எனினும் தற்போது தூய்மை பணிகள் நடைபெற்று வருவதாலும், அப்பணிகள் நிறைவடைய 2 நாள்கள் ஆகும் என்பதாலும் பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு தற்போது திரும்பவேண்டாம்’ என்றாா்.

‘விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் 411 போ் விரைந்து குணமடைந்து வருகின்றனா்’ என்று விசாகப்பட்டினம் மாவட்ட மருத்துவ அதிகாரி திருமலை ராவ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com