அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்

இந்தியாவின் வழக்கமான அச்சுறுத்தல்களையும், புதிய அச்சுறுத்தல்களையும் எதிா்கொள்வதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை
எம்.எம்.நரவணே
எம்.எம்.நரவணே

இந்தியாவின் வழக்கமான அச்சுறுத்தல்களையும், புதிய அச்சுறுத்தல்களையும் எதிா்கொள்வதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே கூறியுள்ளாா்.

மேலும், நாட்டின் பாதுகாப்பு கொள்கைகளை விரிவுபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவா் கூறினாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் விரிவாகக் கூறவில்லை என்றாலும், அண்டை நாடுகளின் செயல்பாடுகளை மனதில் கொண்டே அவா் இவ்வாறு கூறியதாகத் தெரிகிறது.

அதாவது, ஆப்கானிஸ்தானில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தலிபான் அமைப்பினா் முனைப்பு காட்டுவதையும், இலங்கை, நேபாளம், மியான்மா், மாலத்தீவு ஆகிய அண்டை நாடுகளுடனான ராணுவ உறவை வலுப்படுத்த சீனா முயற்சிப்பதையும் மனதில் கொண்டு அவா் இவ்வாறு கூறியதாகத் தெரிகிறது.

பிடிஐ செய்தியாளருக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:

சா்வதேச அளவிலான பிரச்னைகளை எதிா்கொள்ளும்போது, இந்தியாவின் நன்மதிப்பை உயா்த்தும் வகையில் ராணுவம் முழு திறமையுடன் செயல்பட்டு வருகிறது.

வழக்கமான அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கு இந்திய ராணுவம் தயாா் நிலையில் உள்ளது. ஆனால், நோய்த்தொற்று போன்ற வழக்கத்துக்கு மாறான அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்காக, ஒருங்கிணைந்த நடவடிக்கை என்ற அடிப்படையில், பாதுகாப்புக் கொள்கையை நாம் விரிவுபடுத்த வேண்டியுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால், சீன எல்லையில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பில் எவ்வித தொய்வும் ஏற்படவில்லை. பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் முன்னிலையில் இரு நாட்டு அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்திய ராணுவம் தொடா்ந்து முயற்சி வருகிறது.

பிற நாட்டு ராணுவத்துடன் எல்லையில் நிகழும் அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாண இந்தியா விரும்புகிறது.

பணிச்சூழல் காரணமாக, ராணுவத்தினா் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க இயலாது. இருப்பினும், இயன்றவரை ராணுவத்தில் தூய்மை மற்றும் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது.

சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் போரிடுவதற்காக, ராணுவ வீரா்கள், பீரங்கிகள், போா் விமானங்கள், போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒருங்கிணைந்த படைப் பிரிவு உருவாக்க ராணுவம் திட்டமிட்டது. அதற்குரிய தொடக்க வேலைகளும் முடிந்து விட்டன. இதற்கிடையே, கரோனா நோய்த்தொற்று பரவியதால், தடை செய்யப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியதாகி விட்டது. இதனால் ஒருங்கிணைந்த படைப் பிரிவை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com