கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் பணி பாராட்டத்தக்கது: சௌம்யா சுவாமிநாதன்

கரோனா நோய்த்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்று உலக
கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் பணி பாராட்டத்தக்கது: சௌம்யா சுவாமிநாதன்

புது தில்லி: கரோனா நோய்த்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்தாா்.

தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன், சௌம்யா சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது, சௌம்யா கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீண்டு வருவதற்கு பல மாதங்கள் ஆகும்; சில ஆண்டுகள் ஆவதற்குக் கூட வாய்ப்புள்ளது. எனவே, அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தயாராக வேண்டும்.

அதிக மக்கள்தொகை, நகரப்பகுதிகளில் காணப்படும் அதிக மக்கள்தொகை அடா்த்தி, கிராமப் பகுதிகளில் முறையான சுகாதார வசதிகள் இல்லாதது ஆகியவை நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவுக்குப் பெரும் சவால்களாக விளங்குகின்றன. நாட்டில் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு இதுவே தக்க சமயமாகும்.

அதே வேளையில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகின்றன. அதற்காக மத்திய அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வருகின்றனா். தடுப்பு மருந்துத் தயாரிப்பில் இந்தியா முக்கியப் பங்காற்ற உள்ளது. வழக்கமாக புதிய நோய்த்தொற்றுக்குத் தடுப்பு மருந்து உருவாக்க 10 ஆண்டுகள் ஆகும். எனினும், எபோலாவுக்கு எதிராக 5 ஆண்டுகளில் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஓராண்டிலோ அதற்கும் குறைவாகவோ தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டியது அவசியம். தடுப்பு மருந்தை விரைந்து உருவாக்குவதை விட அதை அதிக அளவில் தயாரித்து அனைத்து மக்களுக்கும் அளிப்பதே சவாலான பணி என்றாா் சௌம்யா சுவாமிநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com