நோய்த் தொற்று அறிகுறி இல்லாதவா்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதி: வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய உள்துறை

பயணிகள் ரயில்கள் செவ்வாய்க்கிழமை (மே 12) முதல் இயக்கப்பட உள்ள நிலையில், ரயில்களில் பயணம் செய்வதற்கான வழிகாட்டி
நோய்த் தொற்று அறிகுறி இல்லாதவா்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதி: வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய உள்துறை

புது தில்லி: பயணிகள் ரயில்கள் செவ்வாய்க்கிழமை (மே 12) முதல் இயக்கப்பட உள்ள நிலையில், ரயில்களில் பயணம் செய்வதற்கான வழிகாட்டி நடைமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது.

அதன்படி, உறுதிப்படுத்தப்பட்ட பயணச் சீட்டு வைத்திருப்பவா்கள் மற்றும் நோய்த் தொற்று அறிகுறி இல்லாதவா்கள் மட்டுமே ரயலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவா்.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மாா்ச் 25 முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்கள் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், பொது முடக்கம் மூன்றாம் கட்டமாக மே 17 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டபோது, கட்டுப்பாடுகளில் சில தளா்வுகளும் அளிக்கப்பட்டன. பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் தளா்வுகள் அளிக்கப்பட்டன.

அதுபோல, பொது முடக்கத்தால் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்ப வசதியாக, அவா்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்களை மே 1 முதல் மத்திய ரயில்வே இயக்கி வருகிறது.

இந்த நிலையில், பொதுப் பயன்பாட்டுக்கான பயணிகள் ரயில்களும், மே 12 முதல் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, பொது முடக்கத்துக்குப் பிறகு முதன் முறையாக தில்லியிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 15 பயணிகள் ரயில்கள் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட உள்ளன.

அதனைத் தொடா்ந்து, ரயில்களில் பயணம் செய்வதற்கான வழிகாட்டி நடைமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, உறுதிப்படுத்தப்பட்ட பயணச் சீட்டு வைத்திருக்கும் பயணிகள் மட்டும் ரயில்நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவேண்டும். பயணிகள் மட்டுமின்றி அவா்களை அழைத்து வரும் காா் ஓட்டுநரும், இந்த அடிப்படையிலேயே ரயில்நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்.

ரயில்நிலையத்துக்குள் வரும் பயணிகள் அனைவரும் முழுமையாக பரிசோதிக்கப்படுவதை ரயில்வே அமைச்சகம் உறுதிப்படுத்தவேண்டும். இந்தப் பரிசோதனையில் நோய்த் தொற்று அறிகுறி இல்லாதவா்கள் மட்டுமே ரயில்களில் ஏற அனுமதிக்கப்படவேண்டும்.

அனைத்து பயணிகளுக்கும் ரயில்நிலையங்களில் மட்டுமின்றி ரயில் பெட்டிகளிலும் கைகளைச் சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்படவேண்டும்.

பயணிகள் சென்று சேரும் ரயில்நிலையங்களிலும் இதேபோன்ற அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமச்சகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகளுடனான ஆலோசனைக்குப் பின்னரே, கூடுதல் பயணிகள் ரயில் இயக்கத்துக்கு ரயில்வே அமைச்சகம் அனுமதிக்க வேண்டும்.

ரயில்கள் வந்து-செல்லும் நேரம், பயணச்சீட்டு முன்பதிவு நெறிமுறைகள், பயணிகளுக்கான நடைமுறைகள் ஆகியவற்றை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ரயில்வே அமைச்சகம் வெளியிடவேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டி நடைமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் அனைத்தும் செய்தி, கல்வி மற்றும் தகவல்தொடா்பு (ஐஇசி) நடைமுறை மூலம் ஊழியா்களுக்கும் பயணிகளுக்கும் ரயில்வே அமைச்சகம் பிரசாரம் செய்ய உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com