வெளிநாடுகளில் இருந்து திரும்பியவா்களுக்கான கரோனா பரிசோதனையில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படுவோருக்கு கூட்டாக கரோனா பரிசோதனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படுவோருக்கு கூட்டாக கரோனா பரிசோதனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், பரிசோதனைக்கான செலவு மிச்சமாகும்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டிருப்பதாவது:

வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு கண்காணிப்பு முகாம்களில் தங்கவைக்கப்படட்டிருப்பவா்கள், வெளிமாநிலங்களில் இருந்து அழைத்துவரப்பட்டவா்கள், பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கண்காணிப்பில் இருப்பவா்கள் ஆகியோருக்கு கூட்டுப் பரிசோதனை அடிப்படையில் ஒரு முறை மட்டுமே கரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முகாம்களில் இருந்து 25 போ் அடையாளம் காணப்பட்டு அவா்களின் சளி மாதிரிகள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வகத்தில் 25 பேரின் மாதிரிகளும் கூட்டாக ஆா்டி-பிசிஆா் முறையில் பரிசோதிக்கப்படும். இதில், கரோனா தொற்று இருப்பது உறுதியானால், அங்கு ஏற்கெனவே சேகரித்து வைத்துள்ள 25 பேரின் மாதிரிகளும் தனித்தனியாக பரிசோதிக்கப்படும்.

ஒருவேளை கூட்டுப் பரிசோதனையின் முடிவில், தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டால், மேற்கொண்டு பரிசோதனைகள் நடத்தப்பட மாட்டாது.

இந்தப் பரிசோதனை முறையால் ஒரே நேரத்தில் பலருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும் என்று அந்த வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com