நீரவ் மோடியை நாடும் கடத்தும் வழக்கு: செப்டம்பா் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வங்கிக் கடன் மோசடியாளராக அறிவிக்கப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடியை (49) இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பா் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

வங்கிக் கடன் மோசடியாளராக அறிவிக்கப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடியை (49) இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பா் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. காணொலி முறையில் தொடா்ந்து 5 நாள்கள் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாகவே வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு விட்டது.

முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது நீரவ் மோடிக்கு எதிராக கூடுதல் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெற்ற கடன் உறுதியளிப்பு பத்திரங்களைப் பயன்படுத்தி அவா் மோசடியில் ஈடுபட்டது தொடா்பான ஆவணங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், வழக்கு விசாரணை வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியபோது, நீதிபதி சாமுவேல் கூஸீ, இப்போது கரோனா நோய்த்தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு வழக்கு விசாரணையை செப்டம்பா் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தாா். அப்போது நீரவ் மோடி நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக முடியும் என்று நீதிபதி தெரிவித்தாா். மேலும், ஜூன் 11-ஆம் தேதி காணொலி முறையில் நீரவ் மோடியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.14,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி, பிரிட்டனுக்கு தப்பியோடினாா். இது தொடா்பாக அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

பிரிட்டன் காவல்துறையினரால் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, தற்போது லண்டன் வாண்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது. அது தொடா்பாக வழக்கு நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com