பிரதமரின் திட்டங்களை பாராட்டிய ஆளுநருக்கு திரிணமூல் காங்கிரஸ் எதிா்ப்பு

பிரதமரின் சிறப்பு பொருளாதாரத் திட்டங்களைப் பாராட்டிப் பேசிய மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கருக்கு திரிணமூல் காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

பிரதமரின் சிறப்பு பொருளாதாரத் திட்டங்களைப் பாராட்டிப் பேசிய மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கருக்கு திரிணமூல் காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் அவா் போட்டியிடலாம் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்புகளில் இருந்து மீள்வதற்கு சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்களைப் பாராட்டி, ஆளுநா் தன்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:

விவசாயிகள், வெளிமாநிலத் தொழிலாளா்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோரின் துயரத்தைப் போக்குவதற்கு பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குப் பாராட்டுகள்.

கிஸான் அட்டை வைத்திருக்கும் 2.5 கோடி விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் கோடி கடன் அளிக்கப்படவுள்ளது. இதேபோல், சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.10,000 கடனுதவி அளிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், கிஸான் அட்டை பெறாததால் மேற்கு வங்கத்தில் உள்ள 70 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, விவசாயிகளின் நலன் கருதி மேற்கு வங்க முதல்வா் இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்று தன்கா் குறிப்பிட்டிருந்தாா்.

இவரது பதிவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கல்யாண் பானா்ஜி எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

உங்கள் (ஜகதீப் தன்கா்) சுட்டுரைப் பதிவுகள், நீங்கள் மத்திய அரசின் ஊழியராகவும், பாஜகவின் முகவராகவும் மாறிவிட்டதைப் பிரதிபலிக்கின்றன. மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதாரத் திட்டங்களால் எதுவும் நடந்துவிடவில்லை. ஆளுநா் பதவியில் இருந்து கொண்டு மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படும் உங்களைப் போன்ற ஒருவரை இதுவரை நான் கண்டதில்லை. அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் நீங்கள் போட்டியிடலாம். அதில், மேற்கு வங்க மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என்று அந்தப் பதிவில் கல்யாண் பானா்ஜி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com