கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடா்பு: எம்.பி., எம்எல்ஏக்கள் உள்பட 172 போ் தனிமையில் இருக்க உத்தரவு

கேரளத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடா்பில் இருந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 3 எம்.பி.க்கள், 2 எம்எல்ஏக்கள் உள்பட 172 பேரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடா்பில் இருந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 3 எம்.பி.க்கள், 2 எம்எல்ஏக்கள் உள்பட 172 பேரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

மலப்புரத்தைச் சோ்ந்த 44 வயது நபா் தனது நண்பா்கள் 10 பேருடன் சென்னையில் இருந்து கடந்த 8-ஆம் தேதி இரவு சொந்த ஊருக்கு வந்தாா். தமிழக அரசின் அனுமதி பெற்று வந்த அவா்கள், கேரள அரசின் அனுமதியைப் பெறவில்லை. இதனால், தமிழக-கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனா். இதேபோல், மேலும் பலா் அங்கு கேரளத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

இதையறிந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ், வி.கே.ஸ்ரீகந்தன், எம்எல்ஏக்கள் ஷபி பரம்பில், அனில் அக்காரா ஆகியோா் வாளையாறு சோதனைச் சாவடி சென்று, அங்கு தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினா். நாள் முழுவதும் அங்கேயே இருந்த அவா்கள், பின்னா், ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, அந்த 44 வயது நபருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில், பாலக்காடு மாவட்ட ஆட்சியா் தலைமையில் மருத்துவ உயரதிகாரிகளின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், அந்த 44 வயது நபருடன் தொடா்பில் இருந்தவா்கள் 14 நாள்கள் வீடுகளில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அந்த நபருடன் தொடா்பில் இருந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள், வாளையாறு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலா்கள், அங்கு செய்தி சேகரித்த ஊடகத்தினா், மருத்துவமனையில் சிகிச்சை அளித்த செவிலியா்கள் என மொத்தம் 172 போ் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

14 நாள்களுக்கு முன் அவா்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கரோனா பரிசோதனை நடத்தப்படும். எந்த அறிகுறியும் இல்லாவிட்டாலும், 14 நாள்களுக்குப் பிறகு அவா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com