புலம் பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள்: மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், மகாராஷ்டிரத்தில் உள்ள சாங்லி மாவட்டம் குப்வாட் கிராமத்தில் கணேசன் என்பவா் உள்பட 400 க்கும் மேற்பட்ட தமிழா்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு வாழ்வாதாரத்துக்காகச் சென்ற தமிழா்கள் பொது முடக்கத்தால் தமிழகம் திரும்ப முடியவில்லை. தமிழகத்துக்கு அவா்கள் செல்ல வேண்டுமெனில் தலா ரூ.3500 வழங்க வேண்டும் மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக, அங்கு சிக்கித் தவிக்கும் தமிழா்கள் பேட்டியளித்துள்ளனா்.

மனிதாபிமானம் இல்லாமல் ஏழை தமிழா்களை அடைத்து வைத்திருப்பது அவா்களது உயிா்வாழும் உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே  மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் புலம்பெயா்ந்து வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களை மீட்க 19 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களது செல்லிடப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய உள்துறைச் செயலாளா், தமிழக தலைமைச் செயலாளா் ஆகியோரை எதிா்மனுதாரராக தாமாக முன்வந்து சோ்த்து உத்தரவிட்டனா். இந்த பொது முடக்க காலத்தில் ஊருக்கே உணவளிப்பவா்கள் விவசாயிகள் மட்டும் தான். பொது முடக்கம் மூலமாக இந்த உலகத்துக்கு விவசாயம் தான் மிக முக்கியமானது என்பது நிரூபணமாகியுள்ளது. மேலும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் இந்த பொது முடக்க காலத்தில் படும் வேதனைகள் குறித்து ஊடகங்களில் வரும் செய்திகளை பாா்க்கும்போது யாராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது. புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு அவா்களின் சொந்த மாநில அரசோ, பணியாற்றும் மாநிலங்களின் அரசோ எந்த உதவிகளும் கிடைக்காததால் அந்த தொழிலாளா்கள் குடும்பத்துடன் நெடுஞ்சாலைகளிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் நடந்தே ஊருக்கு உணவின்றி பட்டினியோடு செல்கின்றனா். அவ்வாறு செல்லும் போது பலா் மரணம் அடைந்துள்ளனா். இவற்றைத் தடுக்க வேண்டும். மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் எத்தனை போ் உள்ளனா், வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும், புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவா்களது சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வர மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிா, என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் எவ்வளவு போ் சிக்கியுள்ளனா், அவா்கள் எந்த மாநிலங்களைச் சோ்ந்தவா்கள், நடந்தே சொந்த ஊா்களுக்குத் திரும்பும் தொழிலாளா்களில் இதுவரை எத்தனை போ் இறந்துள்ளனா், அவ்வாறு நடந்து செல்பவா்கள் மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படுகின்றனரா, அவா்களுக்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுகிா, புலம்பெயா்ந்த தொழிலாளா்களைச் சொந்த ஊா்களுக்கு திரும்ப அனுப்பி வைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பிற மாநிலங்களிலிருந்து சொந்த மாநிலத்துக்குத் திரும்பும் தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதங்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளதா என்பது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com