புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தொடரும் இன்னல்கள்!

தில்லியில் இருந்து தங்கள் வீடுகளை நோக்கி பயணத்தைத் தொடங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை போலீஸார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி வருவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தில்லியில் செய்வது அறியாமல் தவித்து
காஜியாபாத் ரயில் நிலையம் செல்வதற்காக அங்குள்ள ராம்லீலா மைதானத்தில் நீண்ட வரிசையில் திங்கள்கிழமை பேருந்திற்காக காத்திருந்த தொழிலாளர்கள்.
காஜியாபாத் ரயில் நிலையம் செல்வதற்காக அங்குள்ள ராம்லீலா மைதானத்தில் நீண்ட வரிசையில் திங்கள்கிழமை பேருந்திற்காக காத்திருந்த தொழிலாளர்கள்.



புது தில்லி: தில்லியில் இருந்து தங்கள் வீடுகளை நோக்கி பயணத்தைத் தொடங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை போலீஸார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி வருவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தில்லியில் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர். 

போலீஸாரிடம் தப்பிக்க மேம்பாலங்களின் கீழும், மரத்தடியிலும் அவர்கள் கைக்குழந்தைகளுடன் தங்கி பசியுடன் நாள்களைக் கழித்து பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

தில்லியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கு ரயில்கள் இயக்கப்படுவதாக தகவல் பரவுவதால் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் நிலையங்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், வெளியூர் ரயில்களில் செல்வதற்காக பெயர்களைப் பதிவு செய்ய முகாமை தில்லி வெஸ்ட் வினோத் நகர் அரசுப் பள்ளியில் தில்லி அரசு திங்கள்கிழமை நடத்தியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் வரிசையில் நின்று பெயர்களைப் பதிவு செய்தனர். இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாதில் உள்ள ராம் லீலா மைதானத்திலும் பெயர் பதிவு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். இதில் சிலரை அங்கிருந்து வாகனங்களில் ரயில் நிலையத்துக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

தில்லி வெஸ்ட் வினோத் நகர் அரசுப் பள்ளியில் சிறப்பு ரயிலில் பயணம் செய்ய, திங்கள்கிழமை பெயர்களைப் பதிவு செய்ய வரிசையில் நிற்கும் பலம்பெயர்த் தொழிலாளர்கள்.

25 வயதாகும் புலம்பெயர்ந்த தொழிலாளி ஹரிராம் சௌதரி கூறுகையில், "பிகாரில் உள்ள எனது தாய் கடந்த 5 தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். துவாரகாவில் 6 தொழிலாளர்களுடன் நான் தங்கியிருந்த அறையை காலி செய்து விட்டு பிகார் செல்வதற்கு தில்லி ரயில் நிலையம் வந்தேன். ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அங்கு போலீஸார் தெரிவித்தார். பின்னர் சத்தர்பூரில் இலவச ரயில் பதிவு நடைபெறுவதாக கூறப்பட்டது. நடைப்பயணமாக அங்கிருந்து சத்தர்பூர் வந்து அங்கேயே இரவை கழித்தோம். மறுநாள் காலையில் அங்கிருந்து போலீஸார் எங்களை விரட்டி அடித்துவிட்டார். அங்கிருந்து நிஜாமுதீன் ரயில் நிலையம் வந்து மேம்பாலத்துக்கு கீழே சற்று இளைப்பாறி வருகிறோம். வேலை இழந்த நாங்கள் எங்கு செல்லவது என்றே தெரியவில்லை என்றார்.

மூன்று குழந்தைகளுக்கு வெறும் சாப்பாட்டை ஊட்டிக் கொண்டிருந்த அவர்களது தாய் ரோஹிணி (24) கூறுகையில், "எனது கணவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். வேலையிழந்ததால் உத்தர பிரதேச மாநிலம், பதாயூனுக்கு நடைப்பயணமாக சென்றோம். காஜிப்பூரில் போலீஸார் தடுத்து நிறுத்தி பேருந்தில் ஏற்றினர். எங்களை அரசு மையத்துக்கு கொண்டு செல்வதாக கூறி, இந்தியா கேட் அருகே இறக்கிவிட்டு சென்றனர். பின்னர் போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க வேறு ஒரு லாரியில் ஏறி நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகே வந்துள்ளோம். எங்களை போலீஸார் மனிதர்களாக கருதாமல் குப்பைப்போல் கொண்டுசெல்கின்றனர்' என்று வேதனையுடன் தெரிவித்தார்.

பிகார், உ.பி. க்கு வாகன ஏற்பாடு: தில்லி காங்கிரஸ் தலைவர் கைது
பிகார், உத்தர பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப தில்லியில் இருந்து வாகன வசதி செய்வதாக அறிவித்த தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அனில் குமார் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

ஆனந்த் விஹார் ரயில் நிலையம் செல்வதற்காக, பிறந்து 16-நாளே ஆன குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருக்கும் தந்தை.

தில்லி - உத்தர பிரதேசம் மாநில எல்லையான காஜிப்பூரிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளிகளிடம் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வாகன ஏற்பாடுகளைச் செய்வதாக அனில் குமார் வாக்குறுதி அளித்துள்ளார். இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் இந்தப் பகுதிக்கு வந்து கூடத் தொடங்கிவிட்டனர்.  கடந்த சனிக்கிழமை இந்த தகவல் போலீஸாருக்கு கிடைக்க அனில் குமாருக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அனில் குமார், தொழிலாளர்கள் தில்லி ஆனந்தவிஹார் மற்றும் காஜிப்பூர் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தொடங்கியுள்ளார். இதை முன்னிட்டு குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு தில்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். ஊரடங்கு விதிமுறைகள் மற்றும் தடை உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி போலீஸார், அனில்குமார் மீது வழக்கு பதிவு செய்யதனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தில்லி கிழக்கு துணைப்போலீஸ் ஆணையர் ஜஸ்மீத் சிங் தெரிவித்தார். 

இதுதுறித்து போலீஸார் கூறுகையில், "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடம் பெயர்வதற்கு முறையான ஏற்பாடுகள் உள்ளன. ஆனால் தொழிலாளர்களை தவறாக வழிநடத்தி, குழப்பி உ.பி. எல்லையில் அவர் கூட்டம் கூடவைத்துள்ளார். இதனால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என போலீஸார் குற்றம் சாட்டினர்.  இதை மறுத்த அனில் குமார், "ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவுவது குற்றச்செயல் என்றால் நான் சிறை 
செல்லத்தயார்' என்றார்.

ஆம் ஆத்மி - பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டு
தில்லியிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும்  விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி திங்கள்கிழமை அறிக்கைப் போர் நடத்தினர். 
ஆம் ஆத்மிக் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங், "புலம்பெயர்ந்தவர்களின் தற்போதைய நிலைமைக்கு முழுக் காரணம் பாஜக தான் என அம்பலமாகியுள்ளது. பணக்காரர்களுக்கு சாதகமாகவும் ஏழைகளுக்கு எதிரான கட்சியானது என்பது தெளிவாகியுள்ளது.  பாஜகவின் கண்மூடித்தனமான நடவடிக்கையால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாடு முழுக்க வெளியேறியுள்ளனர். தொழிலாளர்கள் அதிர்ச்சி, பசி, வேலையின்மை ஆகிய துக்கங்களுக்குள்ளானார்கள்.
இதற்கு ஒரே தீர்வு அதிகப்படியான இரயில்களை விட்டிருக்க வேண்டும். இந்திய ரயில்வேயால் நாளோன்றுக்கு 2 கோடி 30 லட்சம் பேர்களைக் கொண்டு செல்ல முடியும். ஆனால் பாஜக அரசு இதில் தீவிரமாக இல்லை. வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டவர்களுக்கு சொகுசு விமானத்தை கொடுக்கும் பாஜக அரசு, ஏழை தொழிலாளிகளுக்கு பஸ்úஸா ரயிலோ கொடுக்க முன் வருவதில்லை' என்றார் சஞ்சய் சிங்.  

பாஜகவின் தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சியின் தலைவரான ராம்வீர் பிதூரி இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த வெளியிட்டுள்ள அறிக்கையில், "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தில்லியிலிருந்து வெளியேறியதற்கு முழு பொறுப்பு ஆம் ஆத்மி கட்சி தான்.

மத்திய அரசு ஏழைகளுக்கு இலவசமாக வழங்கிய ரேஷன் பொருள்களை ஆம் ஆத்மி  அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முறையாக வழங்கி தில்லியிலிருந்து வெளியேறுவதை தடுத்து நிறுத்தவில்லை. மத்திய அரசு கொடுத்த ரேஷனில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சதவிகிதத்தை தான் தில்லி அரசு ஏழைகளுக்கு கொடுத்துள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானே கூறியிருந்தார். இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறுதில் தடுப்பதில் அக்கட்சிக்கு தான் தோல்வி. 
இத்தோடு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசே 85 சதவீத செலவை ஏற்பதாகக் கூறியது. ஆனால் தில்லி அரசு தொழிலாளர்கள் பதிவு செய்யவேண்டிய இணைய தளத்தையே நிறுத்தியது. இதனால் அவர்கள் நடைப்பயணமாக வீடு திரும்பவேண்டிய நிலைமைக்குள்ளானார்கள் என்று கூறினார் பிதூரி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com