"உம்பன்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பிரதமர் ஆய்வு

"உம்பன்' புயலை எதிர்கொள்வதற்கு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார்.
"உம்பன்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பிரதமர் ஆய்வு


புது தில்லி/புவனேசுவரம்: "உம்பன்' புயலை எதிர்கொள்வதற்கு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள "உம்பன்' புயல் அதிதீவிரமாக மாறியுள்ளது. அப்புயல் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் இடையே வரும் 20-ஆம் தேதி பிற்பகல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்யும் எனவும், கடல் கொந்தளிப்பு ஏற்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், புயலை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயலுக்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் தயார்நிலையை பிரதமர் ஆய்வு செய்தார். 

மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களில் புயல் தொடர்பான பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையின் 25 குழுக்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அப்படையின் இயக்குநர் எஸ்.என்.பிரதான், மேலும் 12 குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமரிடம் தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் 24 குழுக்கள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமரிடம் அவர் தெரிவித்தார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு உதவி: ஆய்வுக் கூட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "புயலை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. புயலை எதிர்கொள்வதற்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். இத்தகைய சூழலில் மக்களின் பாதுகாப்புக்காகவும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்துக்கு எச்சரிக்கை: "உம்பன்' புயல் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், "மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் புயல் கடுமையான சேதங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அப்பகுதிகளில் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; பலத்த மழை பெய்யும். கிழக்கு மேதினிபூர், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாஸ், ஹௌரா, ஹூக்ளி, கொல்கத்தா ஆகிய மாவட்டங்கள் "உம்பன்' புயலால் அதிகபட்ச சேதத்தை எதிர்கொள்ளும். 

தாழ்வான பகுதிகளில் கடல்நீர் உள்புகுந்துவிட வாய்ப்புள்ளது. ஒடிஸாவின் வடக்குப் பகுதி மாவட்டங்களான பத்ரக், பாலாசோர், கேந்திரபதா உள்ளிட்டவற்றிலும் பலத்த சேதங்கள் ஏற்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வெளியேற்றம்:  "உம்பன்' புயல் காரணமாக ஒடிஸாவின் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

இது தொடர்பாக மாநிலத்தின் மீட்புக் குழு ஆணையர் பி.கே.ஜெனா கூறுகையில், ""புயல் காரணமாக மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யவும் சூறாவளிக் காற்று வீசவும் வாய்ப்புள்ளது. எனவே, அப்பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வரும் 21-ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com