காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: தலிபான்

காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தலிபான் பயங்கரவாத அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்தது. 


புது தில்லி: காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தலிபான் பயங்கரவாத அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்தது. 

காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துடன் தலிபான் அமைப்பு கைகோக்கும் என்று சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை மறுத்துள்ள தலிபான் அமைப்பு, மேற்கண்டவாறு கூறியுள்ளது. 

இதுதொடர்பாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "காஷ்மீரில் நடைபெறும் ஜிகாதில் தலிபான் இணையும் என்று சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது. இதர நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது தலிபான் அமைப்பின் தெளிவான கொள்கையாகும்' என்று கூறியுள்ளார். 

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை தலிபான் அமைப்பின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், "காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணப்படாத வரை இந்தியாவுடன் நட்பு பாராட்ட இயலாது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு காஷ்மீரையும் தலிபான்கள் கைப்பற்றுவோம்' என்று பேசியதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகின. 

இந்நிலையில், இந்தியா மற்றும் ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக தலிபான் அமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. சமூக ஊடங்களில் அவ்வாறு வெளியான தகவல் பொய்யானவை என்றும், அவை தலிபான்களின் கருத்து அல்ல என்று இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்தே தலிபான் அமைப்பு தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது. 

எனினும், பாகிஸ்தானிடம் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே தலிபான் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தலிபான் என்பது ஒரே தலைமையுள்ள கட்டமைப்பு அல்ல என்றும் மாறுபட்ட கருத்துள்ள பிரிவுகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com