கேரள நடைமுறையை பின்பற்ற வலியுறுத்திய மனு: உயர்நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கேரள நடைமுறையைப் பின்பற்ற வலியுறுத்தி மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


நாகபுரி: கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கேரள நடைமுறையைப் பின்பற்ற வலியுறுத்தி மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. இந்த நிலையில், கரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக செய்து வரும் கேரள மாநிலத்தின் நடைமுறைகளை மகாராஷ்டிர மாநிலமும் பின்பற்ற அறிவுறுத்துமாறு நாகபுரியைச் சேர்ந்த சுபாஷ் ஜன்வார் என்பவர் சார்பில் மும்பை உயர்நீதிமன்ற நாகபுரி அமர்வில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், "கரோனா நோய்த் தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கிய மார்ச் மாதத்தில், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரே அளவில் உயர்ந்துவந்தது. 

ஆனால், அதன் பிறகு கேரள அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, அங்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. 

ஆனால், மகாராஷ்டிரத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

எனவே, மகாராஷ்டிர அரசு ஒரு குழு அமைத்து கேரள நடைமுறைகளை ஆய்வு செய்து, அதனடிப்படையில் மகாராஷ்டிரத்தில் நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்த வேண்டும்' என்று அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவுக்கு மகாராஷ்டிர அரசு சார்பில் திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், "மகாராஷ்டிரத்துக்கும் கேரளத்தின் நிலைமைக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. 

மகாராஷ்டிரத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, கேரள நடைமுறையைப் பின்பற்ற அறிவுறுத்தவேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை தேவையற்றது' என மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

இந்த வழக்க அடுத்த கட்டமாக செவ்வாய்க்கிழமை (மே 19) விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com