கொல்கத்தா: 169 பயணிகளுடன் வந்தது முதல் "வந்தே பாரத்' விமானம்

"வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு முதல் விமானம், வங்கதேசத்தில் இருந்து திங்கள்கிழமை வந்தடைந்தது.


கொல்கத்தா: "வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு முதல் விமானம், வங்கதேசத்தில் இருந்து திங்கள்கிழமை வந்தடைந்தது. கொல்கத்தா விமான நிலையத்தை வந்தடைந்த அந்த விமானத்தில் 16 நோயாளிகள், ஒரு கர்ப்பிணி உள்பட மொத்தம் 169 பேர் வந்திறங்கினர்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தை மதியம் 12.30 மணிக்கு வந்தடைந்தது. 

அந்த விமானத்தில் மாணவர்கள் 73 பேர், சுற்றுலா சென்று சிக்கிக் கொண்ட 45 பேர், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் 16 பேர், கர்ப்பிணி ஒருவர் உள்பட மொத்தம் 169 பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்ட முதல்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது என்று தெரிவித்தனர். பயணிகள் அனைவரும் 14 நாள்கள் தனிமை முகாமில் தங்கவைக்கப்படுவர். பின்னர், அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அந்த அதிகாரி கூறினார்.

இதனிடையே, வங்கதேசத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் கொல்கத்தா வந்தவர்களை வரவேற்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கரோனா நோய்த்தொற்று பரவியதை அடுத்து, வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகியோர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்கள் அனைவரையும் சிறப்பு விமானங்களில் அழைத்துவர "வந்தே பாரத்' என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, அமெரிக்கா, பிரிட்டன், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்களில் இந்தியர்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.

இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதில் மாநிலங்களிடையே மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜி கடந்த வாரம் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com