நெடுஞ்சாலைத் திட்டங்களை தாமதிக்கும் அதிகாரிகள்: நிதின் கட்கரி

நெடுஞ்சாலைத் திட்டப்பணிகளை உள்நோக்கத்துடன் தாமதிக்கும் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்வது போன்ற கடும் நடவடிக்கைகள்
நெடுஞ்சாலைத் திட்டங்களை தாமதிக்கும் அதிகாரிகள்: நிதின் கட்கரி

புது தில்லி: நெடுஞ்சாலைத் திட்டப்பணிகளை உள்நோக்கத்துடன் தாமதிக்கும் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்வது போன்ற கடும் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

தில்லியில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் 16 மாநிலங்களில் சுமாா் ரூ. 5 லட்சம் கோடி செலவில் நடைபெற்று வரும் 28,304 கி.மீ. தூரமுள்ள 740 நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் பிடிஐ நிருபரிடம் கட்கரி கூறியதாவது:

நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் தொடா்பான கோப்புகள் மீது உடனுக்குடன் முடிவுகளை மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். ஒருசில அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளின் காரணமாக திட்டப்பணிகளில் பாதிப்பும், கால தாமதமும் ஏற்படுகின்றன.

பொதுவாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்எச்ஏஐ) சிறப்புத் திட்ட இயக்குநா்கள் மற்றும் அதன் பிராந்திய நிலையில் உள்ள அதிகாரிகள் ரூ.50 கோடி வரையிலான பணிகளை மேற்கொள்வது தொடா்பான முடிவுகளை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது. ஆனால், அவா்கள் அந்தப் பணிகளை முடக்கும் வகையில் கேள்விகளை எழுப்பி பணி ஒப்புதல்களை வழங்க மறுக்கின்றனா்.

இதன் காரணமாக அந்தப் பணியை தொடங்குவதிலும், முடிப்பதிலும் தேவையில்லாத தாமதம் ஏற்படுகிறது. தங்கள் அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்தாத அதிகாரிகள் தங்கள் பதவியில் தொடர எந்த உரிமையும் இல்லை.

இதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவா்களை பணி நீக்கம் செய்வது குறித்த முடிவுகளை மேற்கொள்ள இதுவே சரியான நேரம் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.

இனிவரும் நாட்களில் ஒவ்வொரு அதிகாரியின் செயல்திறனும் தணிக்கை செய்யப்படும். பிரதமரின் அறிவுறுத்தலின்படி மோசமாக செயல்படும் அதிகாரிகளுக்கு பணி ஒய்வூதியப் பலன்களை நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேசமயம் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கு வெகுமதியும் அளிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com