கரோனா: ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்ற கேரள செவிலியர்களின் ஆச்சரியமூட்டும் பின்னணி

கேரளம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 88 செவிலியர்கள் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்று அங்கு கரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டில் பணியாற்றி வருகிறார்கள்.
கரோனா: ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்ற கேரள செவிலியர்களின் ஆச்சரியமூட்டும் பின்னணி


துபை: கேரளம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 88 செவிலியர்கள் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்று அங்கு கரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டில் பணியாற்றி வருகிறார்கள்.

மே 9ம் தேதி துபை சென்றிறங்கிய 88 செவிலியர்களும் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

இவர்கள் யார்? இவர்களது பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்த போது கிடைத்த தகவல் மிகவும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கரோனாவுக்கு எதிரான போரில் தங்களுக்கு உதவுமாறு ஐக்கிய அரபு அமீரகம் வைத்தக் கோரிக்கையை அடுத்து ஆஸ்டர் மருத்துவமனைகள் குழுமம் அதற்கு முதலில் சம்மதம் தெரிவித்தது. மத்திய அரசின் அனுமதியோடு, துபை சென்றிருக்கும் 88 பேரில் 60 செவிலியர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றியவர்கள். இதில் பெரும்பாலானோர் ஆஸ்டர் மருத்துவமனை குழுமத்தைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்களாவர்.

இந்த செவிலியர்கள் அனைவரும் ஒரு வார காலம் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு, பிறகு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, அதில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே துபை அனுப்பி வைக்கப்பட்டனர்.

உலகம் முழுவதும் கரோனாவுக்கு எதிராக போரிட்டு வரும் நிலையில், உலக நாடுகள் தங்களுக்குள் உதவிக் கொள்வது மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு இந்தியா தரப்பில் இந்த உதவி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று அல்லது ஆறு மாதங்கள் அங்கு தங்கி பணியாற்ற உள்ளனர்.

இந்த பணிக்காக தேர்வுகள் நடந்த போது பெரும்பாலான மருத்துவப் பணியாளர்கள், தாமாகவே இந்த மருத்துவச் சேவையை ஆற்ற முன் வந்தனர்.

அதில் ஒருவர்தான் ஆஷ்லி ஜேய்ஸன் (25). மிக இளம் வயது செவிலியர். திருமணமாகி ஒரு மாத காலத்துக்குள், உலகம் சந்தித்திருக்கும் இதுபோன்ற ஒரு அபாயக் காலத்தில் மக்களுக்கு உதவ தாமாக முன் வந்து ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றுள்ளார். இதற்கு அனுமதி வழங்கிய தனது கணவருக்கு நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறார்.

சின்னச் சிறு குழந்தையோடு கொஞ்சி விளையாட வேண்டிய ஸ்டெஃபானி நியூடன், ஒரு வயது குழந்தையை கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுவிட்டு தனது கடமையை ஆற்றப்புறப்பட்டுவிட்டார். 

இதுவரை ஒரு நாள் கூட விட்டுப் பிரியாமல் இருந்த தனது 9 வயது மகனை விட்டுவிட்டு செவிலியர் பணியை, சிரித்த முகத்தோடு மேற்கொள்ள புறப்பட்ட செவிலியர்களில் ஒருவர் வர்ஷா கனிடாகர். மகாராஷ்டிர மாநிலத்தில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். கணவரும் மகனும் கர்நாடகத்தில் இருந்த நிலையில், சென்று வருகிறேன் என்று நேரில் கூட சொல்லாமல் கிளம்பியிருக்கிறார் வர்ஷா.

பெண் செவிலியர்களைப் போலவே, தனது வயதான பெற்றோரை கவனிக்கும் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டு மக்களுக்காக கடமையாற்ற கிளம்பியிருக்கிறார் சிஜோ தாமஸ். 

இவரைப்போல ஏராளமானோர் தங்களது கடமையை ஆற்ற இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் துபை சென்று பல்வேறு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com