பிரதமர் நிதி குறித்து காங்கிரஸ் ட்வீட்: சோனியா மீது வழக்குப்பதிவு

பிரதமர் நிதி குறித்து காங்கிரஸ் கட்சி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நிதி குறித்து காங்கிரஸ் ட்வீட்: சோனியா மீது வழக்குப்பதிவு


பிரதமர் நிதி குறித்து காங்கிரஸ் கட்சி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் வழக்கறிஞர் பிரவீன் கே.வி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று (புதன்கிழமை) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணி மற்றும் அதுபோன்ற பேரிடர் காலங்களில் மக்கள் நிதி பங்களிப்பு மூலம் அரசுக்கு உதவுவதற்காக பிரதமர் நிதி (பிஎம் கேர்ஸ் நிதி) என்று புதிதாக உருவாக்கப்பட்டது. இதுகுறித்து எவ்வித அடிப்படையும் இல்லாமல் குற்றம்சாட்டி மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்த  காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின்படி, மே 11 மாலை 6 மணிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் நிதியை தவறாகப் பயன்படுத்துவதாக பிரதமருக்கு எதிரான கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளது. அந்த சுட்டுரைப் பக்கத்தைக் கையாளும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் சோனியா காந்தி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்திலுள்ள சாகர் காவல் துறையினர் 153 மற்றும் 505 (1) (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குப்பதிவுக்கு கர்நாடக காங்கிரஸ் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. 

கர்நாடக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுபாஷ் அகர்வால் இதுபற்றி தெரிவிக்கையில், "அரசைக் கேள்வி கேட்பது எதிர்க்கட்சியின் பொறுப்பும் கடமையும். எதிர்கட்சிகளின் குரல்கள் ஒடுக்கப்பட்டால், ஜனநாயகம் மடிந்துவிடும். பிரதமர் நிவாரண நிதி இருக்கும்போது பிரதமர் நிதிக்கான (பிஎம் கேர்ஸ்) அவசியமில்லை என்பதை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது" என்றார்.

இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், சோனியா காந்தி மீதான வழக்குப்பதிவைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் வழக்குப் பதிந்த காவலரை இடைநீக்கம் செய்து, சட்ட நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com