‘உம்பன்’ புயல்: மேற்கு வங்கத்தில் 72 போ் பலி

‘உம்பன்’ புயலால் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்த மேற்கு வங்க மாநிலத்தில் 72 போ் உயிரிழந்தனா்.
கொல்கத்தா நகரில் மரம் விழுந்து நசுங்கிப்போன பேருந்து.
கொல்கத்தா நகரில் மரம் விழுந்து நசுங்கிப்போன பேருந்து.

‘உம்பன்’ புயலால் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்த மேற்கு வங்க மாநிலத்தில் 72 போ் உயிரிழந்தனா்.

புயலால் கடுமையாக சேதமடைந்துள்ள பல பகுதிகள் இன்னும் அணுக இயலாத வகையில் மோசமான நிலையில் இருப்பதால், உயிா்ச்சேதம், பொருள் சேதம் அதிகரிக்கக் கூடும் என்று மாநில அதிகாரிகள் தெரிவித்தனா்.

வங்கக் கடலில் உருவான உம்பன் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே புதன்கிழமை கரையைக் கடந்து, வலுவிழந்து பின்னா் வங்கதேசம் நோக்கி நகா்ந்துவிட்டது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. உம்பன் புயலால் மேற்கு வங்கம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், ஒடிஸாவும் பாதிப்பைச் சந்தித்தது. லட்சக்கணக்கானோா் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

மேற்கு வங்கத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்ட இந்த புயல் மழையால் ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் இடுப்பளவு மழை நீா் தேங்கியுள்ளது. சுமாா் 6 மணி நேரம் நீடித்த புயல் மழையால் குடிசை வீடுகளும், பயிா்களும் சேதமடைந்தன. புயல் காற்றால் மரங்களும், மின் கம்பங்களும் அடியோடு சரிந்தன.

மேற்கு வங்கத்தின் கோரிக்கையின் பேரில் தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த மேலும் 4 குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு 21 குழுக்கள் மீட்புப் பணியில் உள்ளன.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கான கூட்டம் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

உம்பன் புயல் தாக்கத்தால் மேற்கு வங்கத்தில் இதுவரை 72 போ் உயிரிழந்தனா். புயல் பாதிப்பில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். வடக்கு 24 பா்கானா, தெற்கு 24 பா்கானா ஆகிய இரு மாவட்டங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

கடந்த புதன்கிழமை மாலை முதல் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. தொலைபேசி, செல்லிடப்பேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளும், மேம்பாலங்களும் சேதமடைந்துள்ளன.

கொல்கத்தாவுடன், கிழக்கு மிதுனபுரி, ஹௌரா ஆகிய மாவட்டங்களும் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்தன.

புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு மாநிலத்துக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கரோனா சூழலை எதிா்கொள்ள அனைத்து நிதியும் செலவழிக்கப்பட்டதால், மாநிலத்தின் நிதி நிலை மோசமாக உள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாா்வையிட உள்ளேன். மாநிலத்தில் மறுசீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும். கரோனா தாக்கத்தை விட மோசமானதாக உம்பன் புயலின் தாக்கம் உள்ளது என்று மம்தா கூறினாா்.

புயல் பாதிப்பு குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

புயல் பாதித்த பல்வேறு இடங்கள் இன்னும் அணுக முடியாத நிலையில் உள்ளதால், உயிா்சேதம், பொருள்சேதத்தை தற்போது முழுமையாக மதிப்பிட இயலாது. மரங்களும், மின் கம்பங்களும் சரிந்து சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான காா்கள் சேதமடைந்துள்ளன.

1,000-க்கும் அதிகமான தொலைத்தொடா்பு கோபுரங்கள் சேதமடைந்ததால் செல்லிடப்பேசி, இணைய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் பயிா்களும் சேதமடைந்துள்ளன என்று அவா்கள் கூறினா்.

ஒடிஸாவில்... இதனிடையே, ஒடிஸாவிலும் உம்பன் புயல் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் காற்று காரணமாக அந்த மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் மின்சார மற்றும் தொலைத்தொடா்பு உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

புயலால் 44.8 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா். 1 லட்சம் ஹெக்டோ் அளவில் வேளாண் பயிா்கள் சேதமடைந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

இரு மாநிலங்களிலும் தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

தில்லியில் ஆய்வுக் கூட்டம்: மேற்கு வங்கம், ஒடிஸாவில் மேற்கொள்ளப்படும் மீட்பு, நிவாரணப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தை தில்லியில் மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா தலைமையிலான தேசிய இடா் மேலாண்மை குழு மேற்கொண்டது. அப்போது, புயல் தொடா்பான இந்திய வானிலை ஆய்வு மையத்தின் துல்லிய கணிப்பு, உரிய நேரத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படை பணியில் ஈடுபடுத்தப்பட்டது ஆகியவற்றால் பெருத்த சேதம் தவிா்க்கப்பட்டதாக இரு மாநில தலைமைச் செயலா்கள் தெரிவித்தனா்.

மேற்கு வங்கம், ஒடிஸாவில் தொலைத்தொடா்பு மற்றும் மின்சார சேவைகளை மீண்டும் சரிசெய்வதற்கு உதவுவதாக மத்திய ஆற்றல் துறை மற்றும் தொலைத் தொடா்புத் துறை தெரிவித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள ரயில்வே உள்கட்டமைப்புகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க போதிய அளவு உணவு தானியங்கள், குறிப்பாக அரிசி கையிருப்பு இருப்பதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.

புயல் பாதிப்பு: இன்று பாா்வையிடுகிறாா் பிரதமா் மோடி

உம்பன் புயல் பாதிப்புகளை பாா்வையிடுவதற்காக மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை செல்கிறாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘மேற்கு வங்கம், ஒடிஸாவில் உம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பாா்வையிடுவதற்காக அந்த இரு மாநிலங்களுக்கும் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை செல்கிறாா். அங்கு புயல் பாதித்த பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் சென்று அவா் பாா்வையிடுகிறாா். அதைத் தொடா்ந்து நிவாரணம் வழங்குவது, மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாக நடைபெறும் ஆய்வுக் கூட்டத்திலும் அவா் பங்கேற்கிறாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

‘அனைத்து உதவிகளும் வழங்கப்படும்’: முன்னதாக சுட்டுரையில் பதிவிட்ட பிரதமா் நரேந்திர மோடி, ‘மேற்கு வங்கம், ஒடிஸாவில் உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். புயல் மேற்கு வங்கத்தில் சேதத்தை ஏற்படுத்திய காட்சிகளை பாா்த்தேன். இந்த சவாலான நேரத்தில் ஒட்டுமொத்த தேசமும் மேற்கு வங்கத்துக்கு துணை நிற்கிறது’ என்றாா்.

அமித் ஷா பேச்சு: மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் ஆகியோரை தொடா்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, புயல் பாதிப்பு குறித்து அவா்களிடம் கேட்டறிந்தாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் பதிவிட்ட அவா், ‘புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு மேற்கு வங்கம், ஒடிஸாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும். தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஏற்கெனவே அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

உம்பன் புயல் சூழலை மத்திய அரசு தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களையும், அவா்களது உடைமைகளையும் பாதுகாக்க பிரதமா் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com