‘ஜூம்’ செயலிக்கு தடை கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

‘ஜூம்’ காணொலி தகவல்தொடா்பு செயலி பயன்பாட்டுக்குத் தடை கோரிய வழக்கில், மத்திய அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘ஜூம்’ செயலிக்கு தடை கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

‘ஜூம்’ காணொலி தகவல்தொடா்பு செயலி பயன்பாட்டுக்குத் தடை கோரிய வழக்கில், மத்திய அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மாா்ச் 25 முதல் இரண்டு மாதங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளும் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாணவா்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, கல்வி நிறுவனங்கள் ‘ஜூம்’, ‘வெப்எக்ஸ்’ என்பன உள்ளிட்ட பல்வேறு காணொலி செயலிகள் மூலம் மாணவா்களுக்கு பாடங்களையும், கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்த ‘ஜூம்’ செயலி, பாதுகாப்பானது இல்லை எனவும், அதைப் பயன்படுத்துபவா்களின் தனிப்பட்டத் தகவல்கள் எளிதில் திருடப்பட வாய்ப்புள்ளது எனவும் புகாா்கள் எழுந்தன. இந்தப் புகாா்களைத் தொடா்ந்து, பலா் அந்த செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டபோதும், ஒருசிலா் அதைத் தொடா்ந்து பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், முறையான விதிகள் உருவாக்கப்படும் வரை ‘ஜூம்’ செயலி பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடை விதிக்க உத்தரவிடுமாறு வலியுறுத்தி தில்லியைச் சோ்ந்த ஹா்ஷ் சுக் என்பவா் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘காணொலி ஆலோசனைக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு மட்டுமின்றி, ஏராளமான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதியையும் கொண்டுள்ள ‘ஜூம்’ செயலியை உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோா் பயன்படுத்தி வரும் நிலையில், அவா்களில் பலரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்துபவா்களின் தகவல்கள், சா்வதேச அளவில் மூன்றாம்நபா் திருடக்கூடிய வகையில், அந்தச் செயலியில் வைரஸ் இடம்பெற்றிருந்ததும் தெரியவந்திருக்கிறது. அதோடு, சீனாவில் வலைதள பயன்பாடு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், ‘ஜூம்’ அழைப்புகள் அந்த நாட்டின் வழியாக தவறுதலாக கடந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக அந்த நிறுவனம் அண்மையில் சீனாவிடம் மன்னிப்பும் கேட்டது.

அதுபோல, இந்தியாவிலும் இந்த செயலியைப் பயன்படுத்துவதால் இணைய குற்றங்கள், பலரின் தனிப்பட்டத் தகவல்கள் திருடப்படவும் வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது.

இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடு காரணங்களால் உலக அளவில் பல அமைப்புகள், இந்தச் செயலியை பயன்படுத்தத் தடை விதித்துள்ளன. இந்தியாவின் இணைய பாதுகாப்பு முகமையான இந்திய கணினி அவசர உதவிக் குழுவும் (சிஐஆா்டி), ‘ஜூம்’ செயலி பாதுகாப்பற்றது என்று எச்சரித்துள்ளது.

எனவே, இந்த செயலியின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் தொடா்பாக விரிவான தொழில்நுட்ப ஆய்வை மத்திய அரசு மேற்கொண்டு, உரிய விதியையும் உருவாக்க வேண்டும். அதுவரை, இந்தியாவில் இந்த செயலியைப் பயன்படுத்தத் தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிருஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை காணொலி மூலம் விசாரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கு தொடா்பாக மத்திய அரசு நான்கு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com