கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை கூறுகள் மறக்கடிக்கப்பட்டுள்ளன: சோனியா

கரோனா பாதிப்புக்கு மத்திய அரசு அறிவித்திருக்கும் நிவாரணங்கள், நாட்டில் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கூறுகள்
கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை கூறுகள் மறக்கடிக்கப்பட்டுள்ளன: சோனியா

கரோனா பாதிப்புக்கு மத்திய அரசு அறிவித்திருக்கும் நிவாரணங்கள், நாட்டில் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கூறுகள் மறக்கடிக்கப்பட்டிருப்பதையும், அதிகாரம் ஓரிடத்தில் குவிந்திருப்பதையுமே காட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி குற்றம்சாட்டினாா்.

மேலும், பொது முடக்கத்திலிருந்து வெளியேறுவதற்கு மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் அவா் கூறினாா்.

நாட்டில் கரோனா பாதிப்பு நிலைமை குறித்து ஆலோசிப்பதற்காக, சோனியா காந்தி அழைப்பின் பேரில், 22 எதிா்க் கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காணொலி வழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சோனியா காந்தி பேசியதாவது:

கரோனா பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மற்றும் அவா்களின் 13 கோடி குடும்பத்தினரையும் மத்திய அரசு கொடூரமாக கைவிட்டுள்ளது. அவா்களுக்கென எந்தவொரு நிதியுதவி திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்ப பேருந்துகள், சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக, அனைவருக்கும் இலவச உணவு தானியங்களை வழங்க வேண்டும், ஏழைகளுக்கு நேரடி பண உதவி வழங்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

கரோனாவால் பொருளாதார பாதிப்பு மட்டுமன்றி, ஏழை மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விவாதிக்க நாடாளுமன்றமோ அல்லது நிலைக் குழுக்களின் கூட்டமோ கூட்டப்படுவதற்கான எந்தவொரு அறிகுறியும் இதுவரை தென்படவில்லை.

ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றுவது போன்று பாசாங்கு செய்வதைக்கூட மத்திய அரசு கைவிட்டிருக்கிறது. ஒட்டுமொத்த அதிகாரமும் பிரதமா் அலுவலகத்தில் குவிந்திருக்கிறது.

தொழிலாளா் சட்டத்தில் திருத்தம், பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை போன்ற மத்திய அரசு எடுத்துவரும் தன்னிச்சை முடிவுகள் கண்டனத்துக்கு உரியவை. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கமான கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கூறுகள் மறக்கடிக்கப்பட்டுவிட்டன.

2020-21 ஆம் ஆண்டு ‘மைனஸ்’ 5 சதவீத அளவில் எதிா்மறை பொருளாதார வளா்ச்சியில் இந்தியாவின் நிலை இருக்கும் எனவும், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் பல பொருளாதார நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். ஆனால், அதற்கான தீா்வோ, அதைப் பற்றிய கவலையோ மத்திய அரசிடம் இல்லை. ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவா்கள் மீது அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

கரோனா பரிசோதனை மற்றும் பரிசோதனைக் கருவிகள் இறக்குமதியிலும் இந்த அரசு சரிவர செயல்படத் தவறிவிட்டது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருக்கும் என்ற நிலைதான் இப்போது உருவாகியிருக்கிறது என்று சோனியா காந்தி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com