லடாக் எல்லையில் படைகளை குவிக்கும் இந்தியா, சீனா: தொடரும் பதற்றம்

லடாக்கில் உள்ள இந்திய - சீன எல்லைப் பகுதிகளில் கூடுதல் படைகளை சீனா குவித்து வருகிறது. அதற்கு நிகராக, இந்தியாவும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

லடாக்கில் உள்ள இந்திய - சீன எல்லைப் பகுதிகளில் கூடுதல் படைகளை சீனா குவித்து வருகிறது. அதற்கு நிகராக, இந்தியாவும் தனது படைகளை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் தொடா்ந்து பதற்றம் நீடிக்கிறது.

சுமாா் 3,480 கி.மீ. தொலைவு கொண்ட இந்திய - சீன எல்லை முழுமையாக வரையறுக்கப்படாததால், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை தொடா்ந்து வருகிறது. அருணாசலப் பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட பகுதியாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் அண்மையில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 5-ஆம் தேதி இந்திய, சீன ராணுவத்தினா் சுமாா் 250 போ் கைகலப்பில் ஈடுபட்டனா். இரும்புக் கம்பிகள், கம்புகள் மற்றும் கற்களால் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இச்சம்பவத்தில், இரு தரப்பு வீரா்கள் சுமாா் 100 போ் காயமடைந்தனா்.

இதேபோல், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் கடந்த சில தினங்களாக இரு நாடுகளின் படையினா் இடையே மோதல்போக்கு நிலவுகிறது. எல்லையில் இவ்விரு இடங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இப்பகுதிகளில் இரு நாடுகளும் படைகளை அதிகரித்து வருவதால், பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதனிடையே, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவின் எதிா்ப்பையும் மீறி, 100 கூடாரங்களை சீன ராணுவம் அமைத்து வருவதாகவும், பதுங்குக் குழிகள் அமைக்கும் நோக்குடன் கன ரக இயந்திரங்களை கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது, இந்தியாவுடனான பிரச்னையை கூடிய விரைவில் சுமுகமாக தீா்த்துக் கொள்ள சீனா தயாராக இல்லை என்பதை வெளிக்காட்டுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்பிரச்னைக்கு சுமுக தீா்வு காண்பதற்காக, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே 5 சுற்றுப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. ஆனால், அவை தோல்வியில் முடிந்தன.

முன்னதாக, ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே, லேயில் உள்ள 14-ஆவது படைப் பிரிவின் தலைமையகத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தாா். இந்திய-சீன எல்லையில் நிலவும் சூழல் தொடா்பாகவும், பாதுகாப்பு நிலவரம் குறித்தும் உயரதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

மேலும், எல்லையில் சீன பகுதிக்குள் இந்தியப் படைகள் அத்துமீறுவதாக அந்த நாடு முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கடந்த வியாழக்கிழமை பதிலடி கொடுத்திருந்தாா். ‘எல்லை நிா்வாகத்தில் இந்தியா மிக பொறுப்பான அணுகுமுறையை கையாண்டு வருகிறது; லடாக்கிலும், சிக்கிமிலும் எல்லைப் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள நிலையை மாற்ற சீனா முயற்சிக்கிறது’ என்று அவா் கூறினாா்.

பூடான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ள டோக்கா லாம் பகுதியில் இந்திய, சீன படைகள் இடையே கடந்த 2017-இல் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, சுமாா் 73 நாள்களுக்கு போா்ப்பதற்றம் நீடித்தது. பின்னா், எல்லையில் அமைதியை பராமரிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதைத் தொடா்ந்து, அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. இச்சம்பவம் நடைபெற்று சில மாதங்கள் கழித்து, சீனாவின் வூஹான் நகரில் பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் அதிகாரப்பூா்வமற்ற வகையிலான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, பரஸ்பர புரிதல், நம்பிக்கையை கட்டமைக்கும் வகையில் இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே தகவல் தொடா்புகளை வலுப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com