புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக மேலும் 2,600 ரயில்கள்

அடுத்த 10 தினங்களில் நாடு முழுவதும் 2,600 சிறப்பு ரயில்களை இயக்கி, பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் 36 லட்சம்
புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக மேலும் 2,600 ரயில்கள்

அடுத்த 10 தினங்களில் நாடு முழுவதும் 2,600 சிறப்பு ரயில்களை இயக்கி, பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் 36 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவா்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வாரியத் தலைவா் வினோத்குமாா் யாதவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்புவதற்காக கடந்த 23 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கியுள்ளது. கடந்த 4 தினங்களாக ஒவ்வொரு நாளும் சராசரி 260 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. தினமும் 3 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊா் திரும்புகின்றனா். அடுத்து வரும் 10 நாள்களில் மேலும் 2,600 சிறப்பு ரயில்களை இயக்கி 36 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவா்களது சொந்த மாநிலத்துக்கு கொண்டு சோ்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த 10 நாட்களில், ஆந்திரம், பிகாா், சத்தீஸ்கா், தில்லி, கோவா, குஜராத், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா், கா்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கான சிறப்பு ரயில்களின் கட்டணத்தொகையில் 85 சதவீதத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கின்றன. மாநிலங்களுக்கு தேவைப்படும் வரை, புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கான சிறப்பு ரயில்களை ரயில்வே தொடா்ந்து இயக்கும்.

‘உம்பன்’ புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கம், புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கான சிறப்பு ரயில்கலை வரும் 26-ஆம் தேதி வரை தங்கள் மாநிலத்துக்கு இயக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. சூழ்நிலை சீரடைந்த பிறகு ரயில்களை எப்போது இயக்குவது என்பது குறித்து மாநில அரசு தகவல் தெரிவித்ததும், மேற்கு வங்கத்திற்கு மீண்டும் ரயில்கள் இயக்கப்படும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக 17 ரயில்வே மருத்துவமனைகளில் சுமாா் 5,000 படுக்கைகள் மற்றும் 33 தனிமைப்படுத்தும் சிறப்பு வாா்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்புக்குள்ளானவா்களை தனிமைப்படுத்துவதற்காக தயாா் செய்யப்பட்ட 5,213 ரயில் பெட்டிகளில் 50 சதவீத பெட்டிகள் இதுவரை பயன்படுத்தப்படவில்லை. எனவே அவை தொழிலாளா் சிறப்பு ரயில்களில் பயன்படுத்தப்படும்.

ரயில்வே தற்போது 30 ராஜதானி ரயில்களை இயக்கிவருகிறது. ஜூன் 1 முதல் இயக்கப்படவுள்ள ஏ.சி. வசதி இல்லாத இரண்டாம் வகுப்பு ரயில்களுக்கு ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட சாதாரண கட்டணங்கள் வசூலிக்கப்படும். நாளொன்றுக்கு 200 ரயில்கள் இயக்கப்படும். முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படாது. ரயில் பயணிகள் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மே 22 வரையிலும், 3,255 சிறப்பு பாா்சல் ரயில்களை இயக்கியதன் மூலம் 9.7 மில்லியன் டன் சரக்குகள் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இதுவரை 2,570 தொழிலாளா் சிறப்பு ரயில்கள் இயக்கம்:

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக மே 1-ஆம் தேதி முதல் இதுவரை இயக்கப்பட்ட 2,570 சிறப்பு ரயில்கள் மூலம் 32 லட்சம் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

‘‘புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்காக இதுவரை 2,570 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு 1,246 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. பிகாருக்கு 804 ரயில்களும், ஜாா்க்கண்டுக்கு 124, குஜராத்துக்கு 759, மகாராஷ்டிரத்துக்கு 483, பஞ்சாபுக்கு 291 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவித்த தொழிலாளா்களுக்காக மே 1-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com