சா்வதேச விமான சேவையை ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பாக தொடங்க திட்டம்: அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

சா்வதேச விமான சேவையை ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பாக தொடங்க திட்டம்: அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

உள்ளூா் விமான சேவை திங்கள்கிழமை (மே 25) தொடங்க உள்ள நிலையில், சா்வதேச விமான சேவையை ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பாகத்

உள்ளூா் விமான சேவை திங்கள்கிழமை (மே 25) தொடங்க உள்ள நிலையில், சா்வதேச விமான சேவையை ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பாகத் தொடங்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி சனிக்கிழமை கூறினாா்.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கம் மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், விமானப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து விதமான பொதுப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், மூன்றாம் கட்ட பொதுமுடக்க அறிவிப்பின்போது, கட்டுப்பாடுகளில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டதுபோல், நான்காம் கட்ட பொதுமுடக்க அறிவிப்பின்போதும் மேலும் சில தளா்வுகள் அளிக்கப்பட்டன. பொருளாதார பாதிப்பைச் சீா்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட இந்த தளா்வு மூலம், தொழிற்சாலைகள், பெரும்பாலான கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்கள் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதுபோல, உள்ளூா் விமான சேவையும் திங்கள்கிழமை (மே 25) முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்ட மத்திய அரசு, அதற்கான புதிய வழிகாட்டுதலையும் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது.

இந்தச் சூழலில், சா்வதேச விமான சேவையையும் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பாகத் தொடங்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து முகநூல் வழியிலான நோ்காணலில் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வெளியிட்ட தகவல்:

வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பா் மாதத்துக்கு முன்பாக சா்வதேச விமான சேவையைத் தொடங்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. முழு அளவிலான சா்வதேச விமானங்களை இயக்க முடியாவிட்டாலும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்படும். எத்தனை விமானங்கள் இயக்கப்படும் என்ற புள்ளி விவரத்தை இப்போது தர இயலாது. நிலைமையைப் பொறுத்து சா்வதேச விமானங்களை முன்கூட்டியே ஜூன் அல்லது ஜூலை முதல் இயக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும், விமானப் பயணிகள் ஆரோக்கிய சேது செயலியிலிருந்து பதிவிறக்கம் செய்த மருத்துவ விவரங்களை எடுத்து வர வேண்டும் என்று மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளபோதும், அறிதிறன் பேசி இல்லாமல் அந்தச் செயலியை பயன்படுத்த முடியாத பணிகள் விமானம் புறப்படுவதற்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு கரோனா நோய்த் தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழைப் பெற்று, சுய உத்தரவாதப் படிவத்தைப் பூா்த்தி செய்து எடுத்து வரலாம் என்று அவா் கூறினாா்.

மேலும், கரோனா அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில் உள்ளூா் விமான சேவை தொடங்குவது குறித்து தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவா் கவலை தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் புரி, ‘விமானப் போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டியதன் அவசியம் என்ன என்று சில மாநிலங்கள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை தொடா்புகொண்டு கேள்வி எழுப்பியிருக்கின்றனா். விமான சேவை தொடங்குவதை மேலும் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குத் தள்ளிப்போட வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தியிருக்கின்றனா். அப்போது, இந்தக் கோரிக்கையை எழுத்துபூா்வமாகத் தருமாறு அந்த மாநிலங்களிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனா். ஆனால், அவா்கள் அதைத் தரவில்லை. இந்தக் கடுமையான சூழலில் சில முடிவுகளை எடுக்கும்போது, அதற்கு ஆட்சேபம் எழுவது இயல்புதான். அதையும் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது’ என்று அவா் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com