60 நாள்களுக்குப் பிறகு அமராவதி வந்தார் சந்திரபாபு நாயுடு

பொதுமுடக்கம் காரணமாக, தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் தங்கியிருந்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, 60
60 நாள்களுக்குப் பிறகு அமராவதி வந்தார் சந்திரபாபு நாயுடு


ஹைதராபாத்: பொதுமுடக்கம் காரணமாக, தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் தங்கியிருந்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, 60 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை அமராவதியை வந்தடைந்தார்.

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, பொதுமுடக்கத்துக்கு முன் தெலங்கானா மாநிலம், ஹைதராபாதுக்குச் சென்றிருந்தார். கரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25-ஆம் தேதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், அவரால் உடனடியாக ஊர் திரும்ப இயலவில்லை. சிறப்பு அனுமதி பெற்று வந்தாலும் 14 நாள்கள் தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்பதால், ஹைதராபாத் நகரிலேயே தங்கியிருந்து, கட்சிப் பணிகளை அவர் கவனித்து வந்தார்.

இதனிடையே, விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களைச் சந்திக்க ஆந்திர மாநில காவல் துறையிடம் சந்திரபாபு நாயுடு அனுமதி கோரியிருந்தார். அவர் விசாகப்பட்டினத்துக்கு திங்கள்கிழமை விமானத்தில் செல்வதற்கு காவல் துறை அனுமதி அளித்திருந்தது. இதனிடையே, தொழில்நுட்ப காரணங்களால் தெலங்கானாவில் திங்கள்கிழமை விமான சேவை தொடங்கப்படவில்லை.

இதையடுத்து, விசாகப்பட்டினம் செல்லும் பயணத்தை ரத்து செய்த சந்திரபாபு நாயுடுவும் அவரது மகன் நாரா லோகேஷும் சாலை மார்க்கமாக காரில் அமராவதி நகருக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனர். இதற்காக, இரு மாநில காவல் துறையிடமும் அனுமதி பெறப்பட்டிருந்தது. இதனால் எல்லைச் சாவடிகளில் எவ்வித சிரமமுமின்றி அவர்கள் பயணித்தனர். சந்திரபாபு நாயுடு அமராவதி நகருக்கு அருகே உள்ள உண்டவல்லி கிராமத்தில் இருக்கும் தனது வீட்டை திங்கள்கிழமை பிற்பகல் வந்தடைந்தார். ஹைதராபாத் நகரில் 60 நாள்கள் தங்கியிருந்த அவர், மீண்டும் இல்லத்தை வந்தடைந்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com