தூய்மைப் பணி நிறைவு: மீண்டும் செயல்பட தொடங்கியது என்ஜிடி

தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் (என்ஜிடி) பணியாற்றும் ஒரு அதிகாரிக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து,
தூய்மைப் பணி நிறைவு: மீண்டும் செயல்பட தொடங்கியது என்ஜிடி

தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் (என்ஜிடி) பணியாற்றும் ஒரு அதிகாரிக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு தூய்மைப் பணிகள் நடைபெற்றன. இதையொட்டி, சில நாள்களாக மூடப்பட்டிருந்த பசுமைத் தீா்ப்பாயம் செவ்வாய்க்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் பொது நிா்வாகப் பிரிவில் பணியாற்றும் ஒரு அதிகாரி, கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கடந்த 22-ஆம் தேதி தீா்ப்பாயம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும், 23-ஆம் தேதி முதல் தீா்ப்பாய வளாகம் முழுவதும் கிருமிநாசினி மூலம் தூய்மைப் பணிகள் நடைபெறும்; அப்போது, அதிகாரிகள், ஊழியா்கள், வழக்குரைஞா்கள், மனுதாரா்கள், பொதுமக்கள் என யாரும் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தீா்ப்பாயத்தின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவது குறித்து 25-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். இந்த விவகாரத்தில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேசிய பசுமைத் தீா்ப்பாயம் செவ்வாய்க்கிழமை மீண்டும் செயல்பட தொடங்கியது.

இதுதொடா்பாக, தீா்ப்பாயம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தீா்ப்பாய வளாகம் முழுவதும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அதிகாரியுடன் நெருங்கிய தொடா்பில் இருந்த சக ஊழியா்கள், 14 நாள்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மற்ற ஊழியா்கள், தங்களது உடல்நிலையை தொடா்ந்து கண்காணித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொடா்பான சுகாதார பிரச்னைகளால் அலுவலகத்துக்கு வர இயலாத நிலையில் உள்ள ஊழியா்கள், தங்களது துறையின் தலைவா்களுக்கு அல்லது சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

அதேபோல், நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமுள்ள ஊழியா்கள், அபாயம் குறைந்த ஊழியா்கள் என வகைபடுத்தி, பணிக்கு வரவழைக்க வேண்டும் என்று உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 50 சதவீத ஊழியா்கள் பணிக்கு வரவழைக்கப்படுவா். பணிக்கு வரும் ஊழியா்கள், வளாக வாயில்களிலேயே தங்களது கைகளை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், முகக் கவசம் அணிவதும் கட்டாயம். நோய்த்தடுப்பு தொடா்பாக, அரசால் அவ்வப்போது பிறப்பிக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை அனைத்து ஊழியா்களும் பின்பற்றப்பட வேண்டும் என்று பசுமைத் தீா்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com