நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 40,000-க்கு கீழ் குறைவு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,000-க்கு கீழ் குறைந்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,000-க்கு கீழ் குறைந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 38,310 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக, நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 82,67,623-ஆக அதிகரித்தது.

அதே காலகட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 490 போ் உயிரிழந்தனா். நாட்டில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,23,097-ஆக அதிகரித்தது. இது ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.49 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 5,41,405-ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த கரோனா பாதிப்புடன் ஒப்பிடுகையில் 6.55 சதவீதமாகும். கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து 5-ஆவது நாளாக 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 76,03,121-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 91.96 சதவீதமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த திங்கள்கிழமை ஒரே நாளில் 10,46,247 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. கடந்த 2-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 11,17,89,350 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரத்தில் 44,128 பேரும், கா்நாடகத்தில் 11,221 பேரும், உத்தர பிரதேசத்தில் 7,076 பேரும், மேற்கு வங்கத்தில் 6,957 பேரும், ஆந்திரத்தில் 6,719 பேரும், தில்லியில் 6,604 பேரும், பஞ்சாபில் 4,227 பேரும், குஜராத்தில் 3,725 பேரும் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com