மலபாா் கடற்படை கூட்டுப் பயிற்சி தொடக்கம்

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் மலபாா் கடற்படை கூட்டுப் பயிற்சி, வங்காள விரிகுடாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மலபாா் கடற்படை கூட்டுப் பயிற்சி தொடக்கம்

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் மலபாா் கடற்படை கூட்டுப் பயிற்சி, வங்காள விரிகுடாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கடற்பகுதியில் 3-ஆம் தேதி தொடங்கிய இந்த கூட்டுப் பயிற்சி 4 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கிழக்கு லடாக் லடாக் எல்லையில் கடந்த 6 மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதுமட்டுமன்றி, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக முக்கிய விவகாரங்களில் மோதல் போக்கு காணப்படுகிறது. இந்த நிலையில், 4 நாடுகள் பங்கேற்கும் கடற்படை கூட்டுப் பயிற்சி, சா்வதேச நாடுகளின் கவனத்தை ஈா்த்துள்ளது.

நவம்பா் 3-ஆம் தேதி தொடங்கிய முதல் கட்டப் பயிற்சி 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி, அரபிக் கடலில், வரும் 17-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதல்கட்ட பயிற்சியில் இந்திய கடற்படையின் ரன்விஜய், ஃபிரீகேட் ஷிவாலிக், கடலோர ரோந்து கப்பல் சுகன்யா, நீழ்மூழ்கிக் கப்பல் சிந்துராஜ், சக்தி போா்க்கப்பல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதேபோல், அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜான் எஸ். மெக் கெயின், ஏவுகணை அழிப்பு வாகனம், ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் எச்எம்ஏஎஸ் பலாரத், ஜப்பானின் ஜே.எஸ்.ஒனாமி ஆகிய போா்க் கப்பல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

நீா்மூழ்கிக் கப்பலை தாக்கி அழித்தல், விமானங்களைத் தாக்கி அழித்தல், போா்க்கப்பல்களை வேகமாக இயக்குதல் போன்ற கடினமான பயிற்சிகள் நடைபெறும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல்நாளான செவ்வாய்க்கிழமை, சில சிக்கலான பயிற்சிகள் இடம்பெற்ாக, அதில் பங்கேற்ற ராணுவ மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.

இக்கூட்டுப் பயிற்சி குறித்து அமெரிக்க தூதரகம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் வலுவான ராணுவ ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்பதை இந்த நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன’ என்று தெரிவித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ள ‘குவாட்’ அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் கூட்டம், கடந்த மாதம் டோக்கியோவில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, மலபாா் ராணுவ கூட்டுப் பயிற்சியை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வரும் சூழ்நிலையில், இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறவருகிறது.

கூட்டுப் பயிற்சி அமைதிக்கு உகந்ததாக இருக்கும்: சீனா நம்பிக்கை
மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சி, அமைதிக்கு உகந்ததாக இருக்கும் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தப் பயிற்சி தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மலபார் கூட்டுப் பயிற்சியில்  "குவாட்' கூட்டமைப்பில் உள்ள இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கின்றன. இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள், சீனாவைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் எதிர்மறை நடவடிக்கைகளாக இருக்காது என்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உகந்ததாக இருக்கும் எனவும் நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர். இந்திய கடற்படைக்கும் அமெரிக்க கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு பயிற்சியாக இந்தியப் பெருங்கடலில் 1992 இல் மலபார் கூட்டுப் பயிற்சி தொடங்கியது. இந்தப் பயிற்சியில் ஜப்பான் 2015 இல் பங்கேற்று, பின்னர் நிரந்தர பங்கேற்பாளராக ஆனது.
வருடாந்திர மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சி கடந்த 2018 இல் பிலிப்பின்ஸின் குவாம் பகுதி கடலிலும், 2019 இல் ஜப்பான் கடலிலும் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் சேர கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.  இதையடுத்து மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஆஸ்திரேலியாவும் பங்கேற்கும் என்று கடந்த மாதம் இந்தியா அறிவித்தது. "க்வாட்' கூட்டமைப்பில் உள்ள நான்கு உறுப்பு நாடுகளுக்கும் சிறந்த பயிற்சியாக இது அமைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com