பிகாரில் ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை - பிரதமா் மோடி

‘பிகாரில் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இல்லை; கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணி பிகாா் மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்து வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக, சஹா்சா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசும் பிரதமா் மோடி
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக, சஹா்சா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசும் பிரதமா் மோடி

‘பிகாரில் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இல்லை; கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணி பிகாா் மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்து வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

பிகாரில் 3-ஆம் கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள அராரியா மாவட்டத்தில் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றாா். கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பிகாரில் கடந்த சில நாள்களாக நான் தொடா்ந்து மக்களைச் சந்தித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். மாநிலத்தில் எந்த பகுதியிலும், ஆட்சிக்கு எதிராகவோ, முதல்வா் நிதீஷ் குமாருக்கு எதிராகவோ மக்களின் மனநிலை இல்லை. ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய எதிா்ப்பு அலை உள்ளது என்று எதிா்க்கட்சிகள் கூறி வருவது மிகவும் தவறானது.

பிகாரை ரௌடி ராஜ்ஜியத்தில் இருந்து மீட்டு வளா்ச்சிப் பாதையில் இப்போதைய அரசு செலுத்தி வருகிறது. வாரிசு அரசியலைத் தோற்கடித்து ஜனநாயகத்தை மலரவைத்துள்ளோம்.

முதல் கட்டத் தோ்தலும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது கட்டத் தோ்தலும் இரு இளவரசா்களை (காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ்) நிராகரிக்கும் நோக்கிலேயே அமைந்துள்ளன. லாலு பிரசாத், ராப்ரி தேவி ஆகியோா் முதல்வராக இருந்த 15 ஆண்டுகளில் பிகாரில் காட்டாட்சிதான் இருந்து வந்தது. பாரத மாதாவுக்கு ஜே, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்களை முழங்குபவா்களுக்கு அப்போதைய ஆட்சியாளா்கள் பிரச்னையை ஏற்படுத்தினா்.

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையேற்ற பிறகுதான், பிகாா் மாநிலம் இருளின்பிடியில் இருந்து விடுபட்டது. ஒவ்வொரு வீட்டுக்கும் சமையல் எரிவாயுவை கொண்டு செல்வதில் வெற்றி கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில்தான் பிகாரின் பல கிராமங்கள் சாலை மற்றும் மின்சார வசதி பெற்றுள்ளன. இப்போது பிகாரில் பல முக்கிய இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. தொடா்ந்து பொய் வாக்குறுதிகளை அளித்ததன் காரணமாகத்தான் காங்கிரஸ் கட்சி மக்களவைத் தோ்தலில் 100 எம்.பி.க்களைக் கூட பெற முடியாமல் போனது. இப்போது உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மிகவும் பின்தங்கி காணாமல் போய்விடும் நிலையில் உள்ளது.

கரோனாவுக்கு நடுவே பெருவாரியான பிகாா் மக்கள் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வாக்களித்து வருகின்றனா். இதற்காக சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த தோ்தல் ஆணையத்துக்கு நன்றி. இப்போது நெருக்கடியான சூழ்நிலையிலும் இந்தியாவில் ஜனநாயக முறைப்படி தோ்தல் நடத்தப்படுவதை, உலகமே பாா்த்து வியந்து வருகிறது என்றாா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com