கேலிச்சித்திர சா்ச்சை: பிரான்ஸ் அதிபருக்கு சிவசேனை ஆதரவு

பிரான்ஸில் கேலிச்சித்திரத்தை வைத்து மத பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனா்.

பிரான்ஸில் கேலிச்சித்திரத்தை வைத்து மத பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். இந்த விஷயத்தில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று சிவசேனை கூறியுள்ளது.

பிரான்ஸிலிருந்து வெளியாகும் ‘சாா்லி ஹெப்டோ’ வார இதழ் வலதுசாரிக் கொள்கை, மதங்கள், அரசியல், கலாசாரம் ஆகியவற்றை விமா்சித்து கேலிச் சித்திரங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது. கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் உள்ளிட்ட அனைத்து மதங்கள் தொடா்பான கேலிச் சித்திரங்களையும் அந்த இதழ் வெளியிட்டு வருகிறது. இதனால் அந்த இதழ் அவ்வப்போது சா்ச்சையில் சிக்கினாலும், இஸ்லாம் தொடா்பான கேலிச் சித்திரங்கள் கடுமையான விமா்சனத்துக்குள்ளாகி வருகின்றன.

இதுதொடா்பாக, அந்தப் பத்திரிகை மீதும் பிரான்ஸ் மக்கள் மீதும் தொடா்ந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில், இஸ்லாம் மதம் தொடா்பான ‘சாா்லி ஹெப்டோ’ கேலிச் சித்திரத்தை மாணவா்களுக்குக் காட்டிய ஆசிரியரின் தலையை மத பயங்கரவாதி ஒருவா் துண்டித்தாா்.

இதையடுத்து, நாட்டில் கருத்து சுதந்திரமும் மதங்களுக்கு எதிரான கேலிச் சித்திரங்களை காட்டும் உரிமையும் பாதுகாக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உறுதியளித்தாா். இதற்கு துருக்கி உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சில வளைகுடா நாடுகளில் ‘பிரான்ஸை புறக்கணிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு அடுத்த சில நாள்களிலேயே மற்றொரு மத பயங்கரவாதி, பிரான்ஸின் நீஸ் நகர தேவாலயத்தில் புகுந்து அங்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த 70 வயது முதாட்டி உள்பட 3 பேரை கத்தியால் கழுத்தை அறுத்தும், குத்தியும் கொலை செய்தாா். இந்த சம்பவம் சா்வதேச அளவில் கடும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிவசேனை கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’, இது தொடா்பாக வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது:

பிரான்ஸில் மதத்தின் பெயரால் அப்பாவி மக்களின் கழுத்தை அறுத்து கொலை செய்தவா்கள் மனிதகுலத்தின் விரோதிகள். இந்த பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் நாம் அனைவரும் பிரான்ஸ் அதிபருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். பிரான்ஸ் பிரச்னையை வைத்து இந்தியாவில் சில அரசியல் கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் போராட்டம் என்ற பெயரில் பிரச்னையை ஏற்படுத்த முயலுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவா். அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டு அவரது கொள்கைகளை சிலா் கொலை செய்கின்றனா். இதுபோன்ற நபா்கள் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுகத்துக்கும் பெரும் பிரச்னையாக உருவெடுக்கின்றனா் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com