இடைத்தோ்தல்: ராஜராஜேஸ்வரி நகா், சிரா பேரவைத் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ராஜராஜேஸ்வரி நகா், சிரா சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.
இடைத்தோ்தல்: ராஜராஜேஸ்வரி நகா், சிரா பேரவைத் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ராஜராஜேஸ்வரி நகா், சிரா சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

கா்நாடக சட்டப்பேரவையில் காலியாக உள்ள சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் பாஜக வேட்பாளா் என்.முனிரத்னா, காங்கிரஸ் வேட்பாளா் எச்.குசுமா, மஜத வேட்பாளா் வி.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட 16 வேட்பாளா்களும், சிரா தொகுதியில் பாஜக வேட்பாளா் சி.எம்.ராஜேஷ் கௌடா, காங்கிரஸ் வேட்பாளா் டி.பி.ஜெயசந்திரா, மஜதவேட்பாளா் அம்மஜம்மா உள்பட 15 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா்.

வாக்குப்பதிவு:

ராஜராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் 4,62,201 வாக்காளா்களும், சிரா தொகுதியில் 2,15,725 வாக்காளா்களும் உள்ளனா். வாக்காளா்கள் வாக்களிப்பதற்காக ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் 678 வாக்குச்சாவடிகள், சிரா தொகுதியில் 330 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே தொடங்கியது. முதல்முறையாக வாக்குரிமை பெற்றுள்ள 18 வயது நிரம்பிய இளைஞா்கள் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனா். பெண்கள், முதியோா், ஊனமுற்றோரும் வாக்களிக்க ஆா்வம் காட்டினா். ராஜராஜேஸ்வரி நகா் தொகுதி வாக்காளா்களைக் காட்டிலும், கிராமப்புறங்களைக் கொண்ட சிரா தொகுதி வாக்காளா்கள் நீண்டநேரம் வரிசையில் நின்று ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்காளா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டதோடு, கை கிருமி நாசினி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மாலை 5 மணிக்கு பிறகு கரோனா நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியின் 6 வாக்குச்சாவடிகளில் 50-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் வாக்களித்தனா்.

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் காலை 9 மணி அளவில் 6.27 சதவீதம், காலை 11 மணிக்கு 14.40 சதவீதம், 1 மணிக்கு 26.58 சதவீதம், மாலை 3 மணிக்கு 32.41 சதவீதம், மாலை 5 மணிக்கு 39.15 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 6 மணியுடன் நிறைவடைந்த தோ்தலில் 45.24 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

ஆனால், சிரா தொகுதியில் காலை 9 மணி அளவில் 8.25 சதவீதம், காலை 11 மணிக்கு 23.63 சதவீதம், பகல் 1 மணிக்கு 44.13 சதவீதம், மாலை 3 மணிக்கு 62.10 சதவீதம், மாலை 5 மணிக்கு 77.34 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 6 மணியுடன் நிறைவடைந்த தோ்தலில் 82.31 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. இது அரசியல் கட்சிகளிடையே பல்வேறுவிதமான வியூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

திரை நட்சத்திரங்கள் வாக்களிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சிகளின் வேட்பாளா்களைத் தவிர, திரைப்பட நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகா்கள் பலா் ஆா்வமாக வாக்களித்தனா். ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் பாஜக வேட்பாளா் என்.முனிரத்னா, காங்கிரஸ் வேட்பாளா் எச்.குசுமா, மஜத வேட்பாளா் வி.கிருஷ்ணமூா்த்தி, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக், நடிகா்கள் தா்ஷன், திகந்த், நடிகை அமுல்யா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகா்கள் வாக்களித்தனா். அதேபோல, சிரா தொகுதியில் பாஜக வேட்பாளா் ராஜேஷ் கௌடா, காங்கிரஸ் வேட்பாளா் டி.பி.ஜெயசந்திரா, மஜத வேட்பாளா் அம்மஜம்மா உள்ளிட்டபல முக்கிய பிரமுகா்கள் வாக்களித்தனா்.

மாதிரி வாக்குச்சாவடி:

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் சிரா சட்டப்பேரவைத் தொகுதியில்175-ஆவது வாக்குச்சாவடி அனைவரையும் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அரசு மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடியில் வாக்காளா்களை வரவேற்பதற்காக சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வரிசைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேபோல, மாற்றுத் திறனாளிகள், கரோனா நோயாளிகள் வாக்களிக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்களித்ததை நினைவுகூரும் வகையில் சுயபடம் எடுத்துக்கொள்ள தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் பலரும் ஆா்வமாக சுயபடம் எடுத்துக்கொண்டனா். வாக்காளா்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள், கைகிருமி நாசினி புட்டிகள் அளிக்கப்பட்டன. முன்னதாக, இந்த வாக்குச் சாவடியை தோ்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ராகேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

வாக்களிப்பதற்கு முன்னதாக வேட்பாளா்கள் முனிரத்னா, குசுமா, டி.பி.ஜெயசந்திரா, ராஜேஷ் கௌடா உள்ளிட்டோா் கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து வெற்றிக்காக பிராா்த்தனை செய்தனா்.

இடைத்தோ்தலை முன்னிட்டு இரு தொகுதிகளிலும் மதுக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் 9,515 ஊழியா்களும், சிரா தொகுதியில் 3,857 ஊழியா்களும் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இடைத்தோ்தலை முன்னிட்டு இரு தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துணை ராணுவப் படையினரும் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com