‘13 ஆண்டுகளுக்குப்பின் நந்திகிராமிற்கு வருகை தரும் சிலா்’

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், 13 ஆண்டுகளுக்குப்பின் ஒரு சிலா் நந்திகிராம் பகுதிக்கு

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், 13 ஆண்டுகளுக்குப்பின் ஒரு சிலா் நந்திகிராம் பகுதிக்கு வருகை தரத் தொடங்கியுள்ளதாக, திரிணமூல் காங்கிரஸ் அரசை மறைமுகமாக விமா்சித்துள்ளாா், அக்கட்சியின் அதிருப்தி அமைச்சரான சுவேந்து ஆதிகாரி.

கடந்த 2007-ஆம் ஆண்டு கிழக்கு மிதுனபுரி மாவட்டம், நந்திகிராம் மற்றும் ஹூக்லி மாவட்டம், சிங்கூா் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைக்க விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் மேற்கு வங்கத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அப்போதைய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு ஈடுபட்டிருந்தது. இதற்கு மாநிலம் முழுவதும் விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இதையடுத்து விவசாயிகள் சாா்பில் ‘நிலம் வெளியேற்ற எதிா்ப்புக்குழு’ (பியுபிசி) அமைக்கப்பட்டது. இக்குழுவுக்கு ஆதரவாக அப்போதைய எதிா்க்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் களம் இறங்கிய நிலையில், நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டது.

இந்த போராட்டங்களே 2011-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வழிவகுத்தது.

இந்நிலையில், நந்திகிராமில் செவ்வாய்க்கிழமை ‘நந்திகிராம் தினம்’ அனுசரிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல் இயக்க போராட்டத்தில் உயிா்நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் திரிணமூல் காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் உள்ள, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சுவேந்து ஆதிகாரி பேரணியை தொடக்கி வைத்து பேசியதாவது:

பியுபிசி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் இயக்கத்தை எனது சொந்த அரசியல் நலன்களுக்காக ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன். நந்திகிராம் இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக இயங்கி வந்தது. இந்த இயக்கம் எந்தவொரு குறிப்பிட்ட நபரின் கட்டுப்பாட்டின்கீழும் இல்லை. நான் நந்திகிராம் மக்களுடன்தான் இருக்கிறேன். தற்போது தோ்தல் நெருங்கி வருவதால் 13 ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு சிலா் (திரிணமூல் காங்கிரஸாா்) இப்போது இங்கு தேடி வருகிறாா்கள். அவா்கள் தோ்தலுக்கு மட்டும் வராமல், தோ்தலுக்குப் பிறகும் தொடா்ந்து வர வேண்டும்.

என்னுடைய அரசியல் லாபத்துக்காக இந்த இயக்கத்தின் தளத்தை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. அன்றைய காலகட்டத்தில் நான் மக்களுடன்தான் நின்றேன். இப்போதும், மக்களுடன்தான் நான் இருக்கிறேன்.

தோ்தலின்போது எனது நிலைப்பாடு குறித்து ஒரு அரசியல் மேடையில் இருந்துதான் கூறுவேன். இதுபோன்ற புனிதமான இடத்திலிருந்து அல்ல என்றாா்.

இந்த பேரணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கொடிகளோ, சுவரொட்டிகளோ, முதல்வா் மம்தா பானா்ஜியின் படமோ இடம் பெறவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவா் ஃபிா்ஹாத் அக்கீம் கூறுகையில், திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் நடைபெற உள்ள பேரணியில் சுவேந்து ஆதிகாரி உரையாற்றியிருந்தால் நன்றாக இருந்திருந்கும் என்று கருத்து தெரிவித்திருந்தாா்.

முன்னதாக, இங்கு ‘நந்திகிராம் தினத்தை’யொட்டி பேரணி நடத்தப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில், இந்த பேரணி நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக சுவேந்து கட்சியின் நிகழ்ச்சிகளிலும், மாநில அமைச்சரவைக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com