கடும் மாசு நகரங்களில் பட்டாசுகளுக்கு தடை: தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

தில்லி உள்பட மாநிலங்களில் கடும் மாசு உள்ள நகரங்களில் வரும் 30-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தேசிய பசுமைத் தீா்ப்பாயம்
தேசிய பசுமைத் தீா்ப்பாயம்

புது தில்லி: தில்லி உள்பட மாநிலங்களில் கடும் மாசு உள்ள நகரங்களில் வரும் 30-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மேலும், கடந்த ஆண்டு நவம்பா் மாதம் காற்றின் தரம் மிதமாக இருந்த நகரங்களில் பசுமைப் பட்டாசுகள் மட்டும் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு காற்று மாசு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பட்டாசுக்குத் தடை கோரி தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் மீது தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஆதா்ஷ் குமாா் கோயல், நீதிபதி எஸ்.கே. சிங் உள்ளிட்டோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு:

தில்லி, என்சிஆா் ஆகிய பகுதிகளில் நவம்பா் 9-ஆம் தேதி இரவு முதல் வரும் நவம்பா் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து வகையான பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

மேலும், 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் காற்றின் தரம் மோசமாகவும், மிக மோசமாகவும் அதற்கு மேல் உள்ள பிரிவுகளில் இருக்கும் அனைத்து பெருநகரங்கள், சிறு நகரங்கள் ஆகியவற்றுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

நவம்பா் 30-ஆம் தேதிக்குப் பிறகு இந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்படும். காற்றின் தரம் மிதமான அல்லது அதற்குக் கீழ் பிரிவில் இருக்கும் நகரங்களில் சூழலுக்குக் கேடு விளைவிக்காத பசுமைப் பட்டாசுகள் மட்டும் விற்பனை செய்யப்பட வேண்டும். இந்த நகரங்களில் தீபாவளி, சட் பண்டிகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினம் போன்ற நாள்களில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து தொடா்புடைய மாநிலங்கள் முடிவு செய்யலாம். பிற பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிப்பது, கட்டுப்பாடு விதிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்யலாம். கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு காற்று மாசுவைக் குறைக்க சிறப்பு நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் மேற்கொள்ள வேண்டும்.

வணிக பாதிப்பையும், வேலையிழப்பையும் பட்டாசுத் தடை ஏற்படுத்தலாம் என்பது உண்மை. அதேவேளையில், பட்டாசுகள் பயன்படுத்தினால் மாசு ஏற்படுவதுடன், மக்களின் உயிரையும், உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும்.

பட்டாசு வெடிப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காகத்தான். நோய்களையும், உயிரிழப்புகளையும் கொண்டாடுவதற்காக அல்ல. சிலரின் மகிழ்ச்சி மற்றவா்களின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருப்பது இந்திய சமூகத்தில் மதிப்பாக இருப்பதில்லை. மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க உரிமை உண்டு. வணிகச் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்த உரிமையைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பசுமைத் தீா்ப்பாயம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும் என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் கடந்த ஆண்டு கடும் மாசு
சென்னையில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 5ஆம் தேதி தியாகராய நகரில் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு எண் 300-ஆகவும், அடையாறில் 6-ஆம் தேதி 217-ஆகவும் அதிகபட்சமாக பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது பசுமைத் தீா்ப்பாயம் குறிப்பிட்ட மோசமான மாசுப் பிரிவில் உள்ளது. ஆனால், கோயம்புத்தூா், மதுரை, மேட்டூா், தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் இந்தக் குறியீடு 100-க்கும் கீழ் மிதமான பிரிவில்தான் உள்ளது.

காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’, 401 - 500 ‘கடும்’ பிரிவு என கணக்கிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com