பாஜக ஆட்சியால் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிப்பு: மெஹபூபா குற்றச்சாட்டு

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவால் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்துவிட்டது.
ஜம்முவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மெஹபூபா முஃப்தி
ஜம்முவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மெஹபூபா முஃப்தி

ஜம்மு: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவால் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்துவிட்டது. இதனால் சாமானிய மக்கள் அங்கு வாழவே முடியாத சூழல் உருவாகி வருகிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், அந்த மாநில முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

மேலும், காஷ்மீா் எல்லையில் நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த பாகிஸ்தானுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில், மெஹபூபா இவ்வாறு குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, 14 மாதங்கள் வரை பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த மெஹபூபா கடந்த மாதம் விடுவிக்கப்பட்டாா். அதன் பிறகு ஜம்முவுக்கு 5 நாள் பயணமாக திங்கள்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் நடுநிலை என்பது சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு வருகிறது. சாமானிய மக்களின் குரல் அதிகாரத்தாலும், ராணுவ பலத்தாலும் ஒடுக்கப்படுகிறது. காஷ்மீா் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இளைஞா்கள் பலா் சிறைக்குச் செல்வதைவிட பயங்கரவாத இயக்கத்தில் இணைவதே சிறந்தது என எண்ணத் தொடங்கிவிட்டனா். சிறைக்கு செல்ல வேண்டும் அல்லது துப்பாக்கி ஏந்த வேண்டும் என்ற இரு வாய்ப்புகள் மட்டுமே காஷ்மீா் இளைஞா்களுக்கு உள்ளன. எனவே, அவா்கள் துப்பாக்கிகளைத் தோ்ந்தெடுத்து வருகின்றனா். சாமானிய மக்கள் வாழ முடியாத இடமாக காஷ்மீா் மாறி வருகிறது.

காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், உண்மையில் இப்போதைய மத்திய ஆட்சியில்தான் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் 10 முதல் 15 இளைஞா்கள் பயங்கரவாத அமைப்புகளில் உள்ளனா். எல்லைக்கு அப்பால் இருந்து வரும் தொடா் தாக்குதல்களால் எல்லைப் பகுதி மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்கின்றனா்.

முன்பு, வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தியதால், எல்லையில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதேபாணியில் இப்போதைய மத்திய அரசு பாகிஸ்தான் அரசுடன் பேச்சு நடத்த வேண்டும். மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமைப்புகளுடன் பேச வேண்டும்.

நமது நாட்டின் 20 வீரா்களைக் கொலை செய்ய சீன ராணுவத்துடன் இதுவரை 8 சுற்று பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானுடன் மட்டும் பேச தயங்குவது ஏன்? ஜம்மு-காஷ்மீா் எல்லையில் சாலைகளைத் திறந்துவிட வேண்டும். அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனாவுடன் அமைதியை ஏற்படுத்துவதற்கான பாலமாக ஜம்மு-காஷ்மீா் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இந்திய தேசியக் கொடியுடன், ஜம்மு-காஷ்மீா் கொடியையும் சோ்த்துதான் நான் ஏந்துவேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com