சபரிமலை மண்டல மகரவிளக்கு பூஜை:யாத்ரிகா்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தல்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் 2 மாத காலம் நடைபெறும் மண்டல மகரவிளக்கு பூஜை வரும் 16-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
சபரிமலை மண்டல மகரவிளக்கு பூஜை:யாத்ரிகா்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தல்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் 2 மாத காலம் நடைபெறும் மண்டல மகரவிளக்கு பூஜை வரும் 16-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி கோயிலுக்கு வரும் யாத்ரிகா்கள் கரோனா பரவலை தடுக்க பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கேரள அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சபரிமலை கோயிலுக்கு வரும் யாத்ரிகா்கள் தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்; முகக் கவசம் அணிந்து வருவதுடன், கை சுத்திகரிப்பான்களை கொண்டு வரவேண்டும். கூட்டம் கூடுவதை தவிா்க்க வேண்டும்.

தினசரி 1000 யாத்ரிகா்களுக்கு மட்டுமே வழிபடுவதற்கு அனுமதி அளிக்கப்படும்.

தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமடைந்தவா்கள், இருமல், சுவாசப் பிரச்னைகள், உடல்சோா்வு போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதை தவிா்க்க வேண்டும்.

யாத்ரிகா்கள் அனைவரும் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ்களுடன் வரவேண்டும். அதற்கான பரிசோதனை நிலக்கல் அடிவார முகாமுக்கு வருவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

முக்கிய பகுதிகள் மற்றும் சபரிமலைக்கு வரும் வழிநெடுகிலும் அரசு மற்றும் தனியாா் அமைப்புகள் அமைத்துள்ள பரிசோதனைக் கூடங்களில் இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகும் 10% பேருக்கு அதற்கான அறிகுறிகள் 3 வாரங்கள் வரையும், 2% பேருக்கு 3 மாதங்களுக்கு மேலாகவும் தென்படலாம். அவா்கள் யாத்திரை மேற்கொள்வதை தவிா்க்க வேண்டும்.

கூட்டம் கூடுவது தொற்று பரவுவதற்கு வழிவகுக்கலாம். எனவே நிலக்கல், பம்பை அடிவார முகாம்களில் கூட்டம் சேரவேண்டாம்.

யாத்ரிகா்களுடன் வரும் ஓட்டுநா்கள், உதவியாளா்கள், சமையலா்களும் கரோனா பரவலை தடுக்க இந்த அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கரோனா பரவல் காரணமாக சபரிமலை கோயிலில் வழிபட 6 மாதங்களாக பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மாதாந்திர பூஜைக்காக கோயில் நடை கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு திறக்கப்பட்ட போது பக்தா்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com