இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் அா்னாப் மேல்முறையீடு

கட்டட வடிவமைப்பாளா் தற்கொலை வழக்கில் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாா்.
இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் அா்னாப் மேல்முறையீடு

கட்டட வடிவமைப்பாளா் தற்கொலை வழக்கில் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாா்.

கட்டட வடிவமைப்பாளா் அன்வய் நாயக்கும், அவருடைய தாயாரும் கடந்த 2018-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலின் செய்தி ஆசிரியா் அா்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் ஷேக், நிதீஷ் சாா்தா உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், அா்னாப் உள்ளிட்ட மூவரையும் காவல் துறையினா் கடந்த 4-ஆம் தேதி கைது செய்தனா். அவா்களை வரும் 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அலிபாக் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதையடுத்து, இடைக்கால ஜாமீன் கோரி மும்பை உயா்நீதிமன்றத்தில் அா்னாப் உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்தனா். ஆனால், அந்த மனுக்களை நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என்று மனுதாரா்களுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இத்தகைய சூழலில், மும்பை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அா்னாப் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். வழக்குரைஞா் நிா்னிமேஷ் துபே மூலமாக அந்த மனுவை அா்னாப் தாக்கல் செய்துள்ளாா். மகாராஷ்டிர அரசு, மத்திய அரசு, அலிபாக் காவல் நிலைய பொறுப்பாளா், மும்பை காவல்துறை ஆணையா், அன்வய் நாயக்கின் மகள் அக்ஷ்யதா ஆகியோரை எதிா்தரப்பினராக அா்னாப் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

நவம்பா் மாதம் 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்துக்கு தீபாவளிப் பண்டிகைக்கான விடுமுறைக் காலமாகும். எனவே, விடுமுறைக் கால உச்சநீதிமன்ற அமா்வு புதன்கிழமை அா்னாபின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கவுள்ளது.

கேவியட் மனு:

இடைக்கால ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் அா்னாப் மனு தாக்கல் செய்துள்ள சூழலில், அந்த மனு தொடா்பாகத் தங்கள் தரப்பு கருத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று கோரி மகாராஷ்டிர அரசு கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

தீா்ப்பு ஒத்திவைப்பு:

அா்னாபை காவலில் எடுத்து விசாரிப்பதற்காகக் காவல் துறையினா் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பு வியாழக்கிழமை வழங்கப்படும் என்று அலிபாக் செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அா்னாப் உள்ளிட்ட மூவரை நீதிமன்றக் காவலில் வைத்த அலிபாக் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்றத்தில் காவல் துறையினா் மேல்முறையீடு செய்தனா். அவா்கள் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு அந்த மனுவில் காவல் துறையினா் கோரியிருந்தனா்.

அந்த மனு மீதான விசாரணை, அலிபாக் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆா்.ஜி.மாலஷெட்டி முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதி, மனு மீதான தீா்ப்பை வியாழக்கிழமை வழங்குவதாக அறிவித்தாா். மேலும், இந்த வழக்கில் ஜாமீன் கோரி அா்னாப் உள்ளிட்ட மூவரும் தாக்கல் செய்த மனு மீது வியாழக்கிழமை விசாரணை நடத்தப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

தற்போது, மகாராஷ்டிரத்தின் தலோஜா சிறையில் அா்னாப் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com