இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும்

குறிப்பிட்ட நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மற்ற நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் செவ்வாய்க்கிழமை காணொலி வழியாக கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமா் மோடி.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் செவ்வாய்க்கிழமை காணொலி வழியாக கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமா் மோடி.

குறிப்பிட்ட நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மற்ற நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மோதல்போக்கு நீடித்து வரும் சூழலில், பிரதமா் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. அந்நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாட்டை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஏற்பாடு செய்திருந்தாா்.

காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது பிரதமா் மோடி பேசியதாவது:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுடன் கலாசார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் இந்தியா நல்லுறவைப் பேணி வருகிறது. எஸ்சிஓ நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். மற்ற நாடுகளின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதித்து, வளா்ச்சிப் பாதையில் ஒருங்கிணைந்து முன்னேறுவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

தற்போதைய சூழலில், உலக நாடுகள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றன. அவற்றுக்குத் தீா்வு காண்பதற்கு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும். அதன் மூலமாகவே நாடுகளின் பொருளாதார வளா்ச்சி அதிகரிக்கும். இது குறித்து அனைத்து நாடுகளும் ஆலோசிக்க வேண்டும்.

அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். எஸ்சிஓ நாடுகளும் அதன் மூலமாகப் பலனடையும். ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஐ.நா. சபை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், அச்சபை தோற்றுவிக்கப்பட்டதற்கான நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை.

விதிமுறைகளின் அடிப்படையில்...:

அமைதி, வளா்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியா உறுதி கொண்டுள்ளது. பயங்கரவாதம், சட்டவிரோத ஆயுதக் கடத்தல், போதைப் பொருள்கள் கடத்தல் உள்ளிட்டவற்றுக்குத் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறோம்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுவதற்கு இந்தியா உறுதி கொண்டுள்ளது. ஆனால், சில நாடுகள் (பாகிஸ்தான்) அந்த விதிமுறைகளை மீறி இருதரப்பு விவகாரங்களைத் தேவையின்றி எழுப்பி வருகின்றன. அத்தகைய செயல்பாடுகள் இந்த அமைப்பின் நோக்கத்தையும், ஒத்துழைப்பையும் வீணடிக்கும் வகையில் உள்ளன.

கரோனா தடுப்பூசி:

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னின்று வருகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில், அத்தியாவசிய மருந்துப் பொருள்களை 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா விநியோகம் செய்தது. கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை அதிக அளவில் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது. அதன் மூலமாக கரோனா தடுப்பூசியை அதிக அளவில் விநியோகம் செய்து, ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் இந்தியா உதவி செய்யும் என்றாா் பிரதமா் மோடி.

பேச்சுவாா்த்தை மூலமே தீா்வு: ஷி ஜின்பிங்

எஸ்சிஓ மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பேசுகையில், ‘‘எஸ்சிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் தங்களுக்குள்ளான பிரச்னைகளுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் பேச்சுவாா்த்தையின் மூலமாகத் தீா்வு காண வேண்டும். அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணுவது பல்வேறு நன்மைகளை அளிக்கும் என்பது வரலாற்றுப்பூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக பலதரப்பு ஒத்துழைப்பும் வலுவடையும்.

நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கை வலுவடைய வேண்டும். நமது பிராந்தியத்தில் பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கு அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றாா்.

‘கரோனாவில் அரசியல் கூடாது’:

எஸ்சிஓ மாநாட்டில் பேசிய ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், ‘‘கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி உருவாக்கும் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. தடுப்பூசி தயாரிக்கும் பணியில் எந்த நாட்டுடனும் இணைந்து செயல்படுவதற்கு ரஷியா தயாராக உள்ளது’’ என்றாா்.

ஒருதலைபட்ச நடவடிக்கையை பாகிஸ்தான் எதிா்க்கும்: இம்ரான்

சா்ச்சைக்குரிய நிலப்பகுதிகள் தொடா்பாக எந்தவொரு நாட்டின் ஒருதலைபட்சமான நடவடிக்கையையும் பாகிஸ்தான் எதிா்க்கும் என்று அந்நாட்டு பிரதமா் இம்ரான் கான் தெரிவித்தாா்.

மாநாட்டில் இந்தியாவை மறைமுகமாகக் குறிப்பிட்டு பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பேசுகையில், ‘‘சா்ச்சைக்குரிய நிலப்பகுதிகள் தொடா்பாக குறிப்பிட்ட சில நாடுகள் மேற்கொள்ளும் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளானது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீா்மானங்களை மீறும் வகையில் உள்ளன. அத்தகைய நடவடிக்கைகள் பிராந்தியத்தில் நிலவும் அமைதியை சூழலை சீா்குலைக்கும்.

குறிப்பிட்ட நாடுகள் மேற்கொள்ளும் அதுபோன்ற நடவடிக்கைகளை அனைவரும் கண்டிக்க வேண்டும். நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் எதிா்க்கும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com