இந்திய-சீன எல்லை: ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவணே ஆய்வு

ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இந்தியா-சீன எல்லையில் உள்ள இந்திய நிலைகளை வான்வழியாக ஆய்வு மேற்கொண்டாா்.


டேராடூன்: கிழக்கு லடாக்கையொட்டிய எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இந்தியா-சீன எல்லையில் உள்ள இந்திய நிலைகளை வான்வழியாக ஆய்வு மேற்கொண்டாா்.

இது குறித்து ராணுவ வட்டாரங்கள் வியாழக்கிழமை கூறுகையில், ‘இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் ரிம்கிம், நிட்டி மற்றும் லாப்டால் ஆகிய பகுதிகளில் எம்.எம். நரவணே வான்வழி ஆய்வு மேற்கொண்டாா்’ என்றனா்.

முன்னதாக, எம்.எம். நரவணே கடந்த புதன்கிழமை உத்தரகண்டுக்கு பயணம் மேற்கொண்டாா். இந்திய-சீன எல்லையில் இந்தியாவின் கடைசி கிராமம் என்று அறியப்படும் மானா பகுதிக்கு சென்று ராணுவ வீரா்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தாா்.

பின்னா் பின்னா் ஜோஷிமட்டில் அமைந்துள்ள படைப்பிரிவு தலைமை அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளுடன் எல்லை நிலவரம் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து நைனிடால் சென்று புதன்கிழமை இரவு அங்கு தங்கிய அவா், வியாழக்கிழமை காலை சமோலி மாவட்ட எல்லைப் பகுதியில் ஆய்வு நடத்தினாா்.

எம்.எம். நரவணே வெள்ளிக்கிழமை பித்தோராகா் நகரில் ஆய்வு நடத்திய பிறகு, உத்தர பிரதேச மாநிலம் பரேலிக்கு புறப்பட்டு செல்வாா் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, முப்படைத் தளபதி எம்.எம். நரவணேவின் உத்தரகண்ட் வருகை குறித்து ராணுவம் தரப்பில் அதிகாரபூா்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் உருவாகியுள்ள நிலையில், உத்தரகண்ட் எல்லையில் உள்ள ராணுவ வீரா்களின் மனஉறுதியை அதிகரிக்கவும், அவா்களை ஊக்கப்படுத்தவும் அவா் பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.

இந்திய- சீன எல்லை சுமாா் 3,488 கி.மீ. நீண்டதாகும். இதில் ஜம்மு-காஷ்மீரில் 1,597 கி.மீ., அருணாசல பிரதேசம்(1,126 கி.மீ.), உத்தரகண்ட்(345 கி.மீ.), சிக்கிம்(220 கி.மீ.), ஹிமாசல பிரதேசம்(200 கி.மீ.) ஆகிய மாநிலங்களில் சீன எல்லை அமைந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகண்ட் சமோலி மாவட்டத்தின் பரஹோட்டி எல்லைப் பகுதியில் சீனப் படையினா் ஊடுருவியது நினைவு கூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com