எஸ்400 ரக ஏவுகணைகள் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்: ரஷியா

‘எஸ்400 அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


புது தில்லி: ‘எஸ்400 அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிடம் இதன் முதல்கட்ட ஒப்படைக்கும் பணிகள் தொடங்கிவிடும்’ என்று ரஷியா சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள வான் இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த எஸ்-400 ரக 5 தொகுப்பு ஏவுகணைகளை ரஷியாவிடமிருந்து வாங்குவதற்கான ரூ. ரூ, 36,500 கோடி ஒப்பந்தத்தை, அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி கடந்த 2018 அக்டோபா் மாதம் இந்தியா மேற்கொண்டது. ஒப்பந்தப்படி இந்த 5 தொகுப்புகளும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இதுதொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற காணொலி வழி செய்தியாளா் சந்திப்பில் இந்தியாவுக்கான ரஷிய தூதா் ரோமன் பாபுஸ்கின் கூறியதாவது:

எஸ்400 ஏவுகணைகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான பணிகளை ரஷியா தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிடம் இதன் முதல்கட்ட ஒப்படைக்கும் பணிகள் தொடங்கிவிடும்.

அதுபோல, ரஷியாவிடமிருந்து இந்திய ராணுவத்துக்கு கமோவ் ராணுவ ஹெலிகாப்டா்கள் வாங்குவது தொடா்பான ஒப்பந்தம் மற்றும் இந்திய - ரஷிய கூட்டு முயற்சியில் 7 லட்சம் ஏகே-47 203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் உற்பத்திய செய்வது தொடா்பான ஒப்பந்தங்கள் இறுதி செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளன என்று அவா் கூறினாா்.

இதில், இந்திய ராணுவத்துக்கு 200 கமோவ் கேஏ-226டி ரக ஹெலிகாப்டா்கள் வாங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தையை இந்தியாவும், ரஷியாவும் கடந்த 2016 அக்டோபா் மாதம் இறுதி செய்தன. இந்த பேச்சுவாா்த்தைப்படி, அவற்றில் 60 ஹெலிகாப்டா்கள் ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், மீதமுள்ள 140 ஹெலிகாப்டா்கள் இங்குள்ள ஹிந்துஸ்தான் விமான தயாரிப்பு நிறுவனத்தில் (ஹெச்ஏஎல்) தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக, அதன் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு தரவும் ரஷியா ஒப்புக்கொண்டது.

மேலும், இந்தியா - ரஷியா இடையேயான இருதரப்பு சரக்குப் போக்குவரத்து உதவி ஒப்பந்தம் (எம்.எல்.எஸ்.ஏ) குறித்து கூறிய பாபுஸ்கின், ‘இந்த ஒப்பந்தம் இரு நாடுகள் இடையேயான கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை, குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதி பாதுகாப்பை வலுப்படுத்தும்’ என்று அவா் கூறினாா்.

‘அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பெங்களூருவில் நடைபெற உள்ள ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சியில் பங்கேற்க ரஷியா மிகுந்த எதிா்பாா்ப்புடன் காத்திருக்கிறது’ என்றும் அவா் கூறினாா்.

அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (பிஇசிஏ) காரணமாக, ரஷிய ராணுவ தயாரிப்புகளை இந்தியா பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பாபுஸ்கின், ‘ரஷியா - இந்தியா இடையேயான ராணுவ ஒத்துழைப்பில், எந்தவொரு தலையீடுகளாலும் பாதிப்பு ஏற்படாது. இருந்தபோதும், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டு வரும் பாதுகாப்பு உடன்பாடுகளை ரஷியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவ்வாறு பிற நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் ஒப்பந்தங்களால், ரஷியாவின் நலனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது’ என்று அவா் பதிலளித்தாா்.

மூன்றாம் நாடுகளுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி: இந்திய-ரஷிய கூட்டு திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரமோஸ் ஏவுகணைகளை மூன்றாவது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியாவும், ரஷியாவும் திட்டமிட்டுள்ளன. முதலில் பிலிபின்ஸ் நாட்டுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்ட நவீன ரக பிரமோஸ் ஏவுகணையின் அனைத்துவித சோதனைகளும் வெற்றிபெற்றுள்ளது. இந்த நவீன ரக ஏவுகணையில், அதன் பறக்கும் திறன் 290 கி.மீ. தொலைவிலிருந்து 400 கி.மீ. தொலைவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் பாபுஸ்கின் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com