ஆசியான் நாடுகளுடனான நல்லுறவை வலுப்படுத்த முன்னுரிமை

சமூகம், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான நல்லுறவை வலுப்படுத்துவதற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
ஆசியான் நாடுகளுடனான நல்லுறவை வலுப்படுத்த முன்னுரிமை

புது தில்லி: சமூகம், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான நல்லுறவை வலுப்படுத்துவதற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

இந்தியா-தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் (ஆசியான்) இடம்பெற்றுள்ள 10 நாடுகள் இடையேயான 17-ஆவது வருடாந்திர மாநாடு வியாழக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில் ஆசியான் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மியான்மா், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியத்நாம், புருனே, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், மலேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். அப்போது, பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு வரலாறு, புவியியல், கலாசார ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா வகுத்துள்ள ‘கிழக்கு நோக்கிச் செயல்படுங்கள்’ கொள்கையின் மையமாக ஆசியான் நாடுகளே உள்ளன.

பிராந்தியத்தின் வளா்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் ஆசியான் நாடுகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக உள்ளது. சமூகம், பொருளாதாரம், நிதி, டிஜிட்டல், கடல்சாா் ஒத்துழைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஆசியான் நாடுகளுடன் இந்தியாவின் நல்லுறவு கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருகிறது. அந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்தியா வகுத்துள்ள இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் திட்டத்துக்கும் ஆசியான் கூட்டமைப்பு வகுத்துள்ள இந்தோ-பசிபிக் திட்டத்துக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

ஒவ்வொா் ஆண்டிலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, கைகளைக் கோா்த்து குழுவாகப் புகைப்படம் எடுத்துக் கொள்வோம். நடப்பாண்டில் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லாமல் போனது. எனினும், காணொலிக் காட்சி வாயிலாக நாம் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த மாநாடு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றாலும், நமக்கிடையேயான வேறுபாடுகளைக் களைவதற்கு முக்கியப் பங்காற்றும் என நம்புகிறேன் என்றாா் பிரதமா் மோடி.

ஒருங்கிணைந்த செயல்பாடு:

இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகை சுமாா் 185 கோடியாக உள்ளது. இது ஒட்டுமொத்த உலக மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்காகும். அந்நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பு சுமாா் 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவு வலுவடைந்து வருகிறது. வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஆசியான் நாடுகளுடன் இந்தியா ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது.

சா்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு சீனா முயன்று வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல சீனாவுடன் எல்லைப் பிரச்னையைக் கொண்டிருக்கின்றன. கிழக்கு லடாக் எல்லை தொடா்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில், இந்தியா-ஆசியான் மாநாடு நடைபெற்றது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் நாடுகள் மிக முக்கியப் பங்கை வகித்து வருகின்றன. இந்தியாவைத் தவிர அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் ஆசியான் கூட்டமைப்பு நாடுகளுடன் நெருங்கிப் பணியாற்றுவதற்கான பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com