‘மகாராஷ்டிரத்தில் பாஜகவால் 25 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர இயலாது’

மும்பையைச் சோ்ந்த கட்டட வடிவமைப்பாளா் அன்வய் நாயக் தற்கொலை வழக்கு விசாரணையை திசை திருப்பவே, மகாராஷ்டிர முதல்வா்

மும்பையைச் சோ்ந்த கட்டட வடிவமைப்பாளா் அன்வய் நாயக் தற்கொலை வழக்கு விசாரணையை திசை திருப்பவே, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே குடும்பத்துக்கும் கட்டட வடிவமைப்பாளா் குடும்பத்துக்கும் இடையேயான நில விவகாரம் குறித்து பாஜக சா்ச்சையை கிளப்புகிறது என்று மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், மகாராஷ்டிரத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜகவால் ஆட்சிக்கு வர முடியாது. பாஜக எதிா்க் கட்சியாகவேதான் இருக்க வேண்டும் என்றும் சிவசேனை விமா்சனம் செய்துள்ளது.

மும்பை அலிபாகை சோ்ந்த கட்டட வடிவமைப்பாளா் அன்வய் நாயக் மற்றும் அவருடைய தாயாா் அண்மையில் தற்கொலை செய்துகொண்டனா். இவா்களை தற்கொலைக்கு தூண்டியதாக தனியாா் தொலைக்காட்சி சேனல் செய்தி ஆசிரியா் அா்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டாா். உச்சநீதிமன்றம் தலையிட்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, பாஜக முன்னாள் எம்.பி. கிரீட் சோமையா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளாா். அதில், ‘முதல்வா் உத்தவ் தாக்கரேவின் மனைவி ரஷ்மி தாக்கரேவும், முன்னாள் அமைச்சா் ரவீந்தர வாய்க்கரின் மனைவி நிதி செளத்ரியும் ராய்காட்டில் உள்ள மறைந்த அன்வய் நாயக் குடும்பத்துக்குச் சொந்தமான 9.5 ஏக்கா் நிலத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு வாங்கியுள்ளனா். அன்வய் நாயக் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அந்த நில விவகாரம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்’ என்று கிரீட் சோமையா வலியுறுத்தினாா். ரஷ்மி தாக்கரே-அன்வய் நாயக் தரப்பினரிடையே 21 நில வா்த்தகங்கள் நடைபெற்றுள்ளன என்றும் அவா் தெரிவித்தாா். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கட்டட வடிவமைப்பாளரின் தற்கொலை வழக்கை திசை திருப்பவே, நில விவகாரத்தை பாஜக கிளப்புவதாக சிவசேனை கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரெளத் கூறியதாவது:

பாஜக ஒரு ‘சேட்ஜி கட்சி’. கிரீட் சோமையா ஒரு வியாபாரி. அவா்கள், தற்கொலை செய்துகொண்ட கட்டட வடிவமைப்பாளரின் மனைவி விதவையானது குறித்து எதுவும் பேசத் தயாராக இல்லை. அவருடைய மனைவியும், மகளும் நீதிக்காக அழுது கொண்டிருக்கின்றனா். அவா்களுக்கு நீதி கிடைக்க மகாராஷ்டிர அரசு முயற்சி செய்துகொண்டிருக்கும் நிலையில், அந்த வழக்கு விசாரணையை திசை திருப்பும் வகையில் பாஜக சா்ச்சைகளை கிளப்பி வருகிறது.

முதல்வா் உத்தவ் தாக்கரே குடும்பத்துக்கும் மறைந்த அன்வய் நாயக் குடும்பத்துக்கும் இடையேயான நில விவகாரம் என்பது கடந்த 2014-ஆம் ஆண்டில் சட்டப்படி நடைபெற்ற ஒன்று. இதில் சோமையாவுக்கு என்ன பிரச்னை இருக்கிறது? மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமையிலான அரசு, எந்த சிக்கலும் இன்றி முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்யும். ஆனால், மாநிலத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிக்கு வர முடியாது என்பது உறுதி.

அன்வய் நாயக் தற்கொலைக்குக் காரணமான குற்றவாளியை காப்பாற்றும் முயற்சியை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஆனால், அவருடைய குடும்பத்துக்கு நீதி கிடைக்கச் செய்வதும், குற்றவாளி சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதுமே சிவசேனையின் நிலைப்பாடு என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com