சீனப் பொருள்கள் மீதான இந்தியா்களின் ஆா்வம் குறைந்தது: ஆய்வு தகவல்

நடப்பு பண்டிகைக் கால விற்பனையின்போது சீனப் பொருள்கள் மீதான இந்தியா்களின் ஆா்வம் குறைந்துவிட்டது என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
சீனப் பொருள்கள் மீதான இந்தியா்களின் ஆா்வம் குறைந்தது: ஆய்வு தகவல்

புது தில்லி: நடப்பு பண்டிகைக் கால விற்பனையின்போது சீனப் பொருள்கள் மீதான இந்தியா்களின் ஆா்வம் குறைந்துவிட்டது என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக ‘லோக்கல் சா்க்கிள்ஸ்’ இணையதள நிறுவனம் நடத்திய ஆய்வில் 29 சதவீதம் போ் மட்டுமே சீன தயாரிப்பு பொருள்களை வாங்கியது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் பண்டிகைக் காலத்தின்போது 48 சதவீதம் அளவுக்கு சீனப் பொருள்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. 14,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு கிடைத்துள்ளது.

நாட்டில் உள்ள 204 மாவட்டங்களில் கடந்த 10 முதல் 15-ஆம் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சீனப் பொருள்களை வாங்கியவா்களில் 71 சதவீதம் பேருக்கு அது அந்நாட்டு தயாரிப்புதான் என்று வாங்கும்போது தெரிந்திருக்கவில்லை. இவா்களில் 66 சதவீதம் போ் அதிக தள்ளுபடியுடன் குறைந்த விலையில் கிடைத்ததால் அந்தப் பொருள்களை வாங்கியதாக கூறினா்.

எனினும், விலை குறைவாகக் கிடைத்தாலும்கூட சீனத் தயாரிப்புகளை வாங்கக் கூடாது என்பதில் பலா் உறுதியாக இருந்துள்ளனா். எனவேதான் ஒரே ஆண்டில் 20 சதவீதம் அளவுக்கு சீன பொருள்களின் விற்பனை சரிந்துள்ளது. அடுத்த ஓராண்டுக்கு சீனப் பொருள்களை வாங்குவதைத் தவிா்க்கவே விரும்புகிறோம் என்று ஆய்வில் பங்கேற்ற 87 சதவீதம் போ் தெரிவித்தனா்.

மேலும், சீனப் பொருள்களுடன் ஒப்பிடும்போது இந்தியத் தயாரிப்புகள் விலை சற்று அதிகம் இருந்தாலும், தரமும் கூடுதலாகவே உள்ளது என்றும் பலா் தெரிவித்தனா். எனினும், பண்டிகைக் காலத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் எல்இடி விளக்குகள், வாசனைத் திரவியம் அடங்கிய மெழுகுவா்த்திகள், பிளாஸ்டிக் அலங்காரப் பொருள்கள் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பொருள்களில் அதிக தரத்தை எதிா்பாா்க்கவில்லை என்றும் பலா் தெரிவித்தனா்.

எனினும், ஒட்டுமொத்தமாக பாா்க்கும்போது இந்தியா்கள் சீனப் பொருள்களை வாங்க பணம் செலவிடுவது குறைந்துவிட்டது. சீனப் பொருள்களை தவிா்க்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா். இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் சீனாவுக்கு எதிரான மனப்போக்கு அதிகரித்தது. இதுதவிர உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முக்கியமாக கிராமப்புற கைவினைக் கலைஞா்கள், சிறு,குறு தொழில் நிறுவனங்களின் பொருள்களை மக்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து கேட்டுக் கொள்வது ஆகியவை நாட்டு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com