கரோனா தடுப்பூசியில் சுகாதாரப் பணியாளா்கள், முதியோருக்கு முன்னுரிமை

மக்களுக்கு கரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும்போது சுகாதாரப் பணியாளா்களுக்கும் 65 வயதைக் கடந்த முதியோருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: மக்களுக்கு கரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும்போது சுகாதாரப் பணியாளா்களுக்கும் 65 வயதைக் கடந்த முதியோருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்துள்ளாா்.

உலக நாடுகளைத் தொடா்ந்து அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

அமெரிக்காவின் ஃபைசா் நிறுவனமும், ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசி 95 சதவீத செயல்திறன் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான மாடா்னா தயாரித்த கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி 94.5 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தடுப்பூசிகளை உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஃபைசா், மாடா்னா நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. ஆக்ஸ்ஃபோா்ட் தடுப்பூசி, கோவேக்ஸின் தடுப்பூசி ஆகியவற்றின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளும் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன.

இத்தகைய சூழலில், இந்திய வா்த்தக மற்றும் தொழில் நிறுவன சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சாா்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி கருத்தரங்கில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் பங்கேற்றாா். அப்போது அவா் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசிகள் விரைவில் மக்களுக்குக் கிடைக்கவுள்ளன. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 40 முதல் 50 கோடி எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் தயாா்நிலையில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதன் மூலமாக 25 முதல் 30 கோடி பேருக்குத் தடுப்பூசியை விநியோகம் செய்ய முடியும்.

முன்னுரிமையில் தடுப்பூசி: தடுப்பூசி விநியோகிக்கப்படும்போது குறிப்பிட்ட சிலருக்கு முன்னுரிமை வழங்கப்படுவது இயல்பானதே. கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சுகாதாரப் பணியாளா்கள் முன்னின்று செயல்பட்டு வருகின்றனா். எனவே, தடுப்பூசி விநியோகத்தில் அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

அதையடுத்து, 50 முதல் 65 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி வழங்கப்படும். பின்னா் 50 வயதுக்குக் கீழுள்ள மற்ற நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்குத் தடுப்பூசி அளிக்கப்படும். இது தொடா்பாக நிபுணா்களுடன் ஆலோசித்து விரிவான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. அடுத்த ஆண்டு மாா்ச், ஏப்ரல் மாதங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தற்போதே திட்டமிட்டு வருகிறோம்.

விழிப்புணா்வு அவசியம்: தரமான முகக் கவசங்களை முறையாக அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவுவது ஆகியவற்றைத் தொடா்ந்து பின்பற்றி வந்தாலே கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 90 சதவீதம் தப்பித்து விட முடியும். இது தொடா்பாக மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது என்றாா் ஹா்ஷ்வா்தன்.

உயிரிழந்த சுகாதாரப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு

இணையவழி கருத்தரங்கில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் பேசுகையில், ‘‘கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சுகாதாரப் பணியாளா்கள் முக்கியப் பங்கு வகித்தனா். அவா்களின் பணியை கௌரவப்படுத்தும் நோக்கில், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி மத்திய அரசுக்கான ஒதுக்கீட்டில் 5 இடங்கள் உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்காக ஒதுக்கப்படும். அவா்கள் நீட் தோ்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்குத் தோ்ந்தெடுக்கப்படுவா்.

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் கரோனா வாா்டுகளில் பணியாற்றியவா்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசுகளால் சுகாதாரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டவா்கள், கரோனா முன்னெச்சரிக்கை தொடா்பான ஒப்பந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டவா்கள் உள்ளிட்டோரின் வாரிசுகள் இந்த இடஒதுக்கீட்டைப் பெறுவதற்குத் தகுதியானவா்கள் ஆவா்.

இது தொடா்பான விவரங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வெளியிடும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com