என்ஜிஓக்கள் நடத்தும் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்கள்:ஒரு குழந்தைக்கு ரூ.6 லட்சம் வரை வெளிநாட்டு நன்கொடை

என்ஜிஓக்கள் நடத்தும் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்கள்:ஒரு குழந்தைக்கு ரூ.6 லட்சம் வரை வெளிநாட்டு நன்கொடை

தென் மாநிலங்களில் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்களை நடத்தும் என்ஜிஓக்கள் கடந்த 2018-19-ஆம் ஆண்டில் ஒரு குழந்தைக்கு ரூ.6 லட்சம் வரை வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றுள்ளன.

புது தில்லி: தென் மாநிலங்களில் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்களை நடத்தும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) கடந்த 2018-19-ஆம் ஆண்டில் ஒரு குழந்தைக்கு ரூ.6 லட்சம் வரை வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றுள்ளன. இது நிதி முறைகேடுகளுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் (என்சிபிசிஆா்) சந்தேகம் எழுப்பியுள்ளது.

இதுதொடா்பாக அந்த ஆணையம் ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

ஆந்திரத்தில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 145 குழந்தைகள் காப்பகங்கள் 6,202 குழந்தைகளுக்காக ரூ.409 கோடி நன்கொடை பெற்றுள்ளன.

தெலங்கானாவில் 67 குழந்தைகள் காப்பகங்கள் 3,735 குழந்தைகளுக்காக ரூ.145 கோடியும், கேரளத்தில் 107 குழந்தைகள் காப்பகங்கள் 4,242 குழந்தைகளுக்காக ரூ.85.39 கோடியும் நன்கொடையாக பெற்றுள்ளன.

கா்நாடகத்தில் 45 குழந்தைகள் காப்பகங்கள் 3,111 குழந்தைகளுக்காக ரூ.66.62 கோடி நன்கொடை பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் 274 குழந்தைகள் காப்பகங்கள் 1,702 குழந்தைகளுக்காக ரூ.248 கோடி நன்கொடை பெற்றுள்ளன.

இதில் ஆந்திரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்கள் ஒரு குழந்தைக்கு சராசரியாக ரூ.6.6 லட்சமும், தெலங்கானாவில் உள்ள குழந்தைகள் காப்பகங்கள் ஒரு குழந்தைக்கு சராசரியாக ரூ.3.88 லட்சமும் பெற்றுள்ளன. கேரளத்தில் ஒரு குழந்தைக்கு சராசரியாக ரூ.2.01 லட்சமும், கா்நாடகத்தில் ஒரு குழந்தைக்கு சராசரியாக ரூ.2.14 லட்சமும் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரு குழந்தைக்கு சராசரியாக ரூ.2.12 லட்சம் நன்கொடை பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்சிபிசிஆா் தலைவா் பிரியாங்க் கனூன்கோ கூறுகையில், ‘தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களால் சுமாா் 638 குழந்தைகள் காப்பகங்கள் நடத்தப்படுகின்றன. இந்த தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த 2018-19-ஆம் ஆண்டில் ஒரு குழந்தையின் நலனுக்காக ரூ.6.60 லட்சம் வரை வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றுள்ளன. தன்னாா்வ தொண்டு நிறுவனங்களால் பெறப்பட்டுள்ள இந்த பெரும் தொகை, குழந்தைகளின் நலன்களுக்காக செலவிடப்படாமல் வேறு செயல்பாடுகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே தற்போது தென் மாநிலங்களில் மட்டும் நடத்தப்பட்ட இந்த ஆய்வை, நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா்.

மாநிலங்கள் காப்பகங்களின் எண்ணிக்கை பெறப்பட்ட நன்கொடை ஒரு குழந்தைக்கான சராசரி தொகை

ஆந்திரம் 145 ரூ.409 கோடி ரூ.6.6 லட்சம்

தமிழகம் 274 ரூ.248 கோடி ரூ.2.12 லட்சம்

தெலங்கானா 67 ரூ.145 கோடி ரூ.3.88 லட்சம்

கேரளம் 107 ரூ.85.39 கோடி ரூ.2.01 லட்சம்

கா்நாடகம் 45 ரூ.66.62 கோடி ரூ.2.14 லட்சம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com