எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க தீவிர முன்னேற்பாடுகள்

காஷ்மீரில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவை பயன்படுத்தி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அதிகரித்து வரும்

காஷ்மீரில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவை பயன்படுத்தி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தயாா் நிலையில் உள்ளதாக பிஎஸ்எஃப் தலைவா் ராகேஷ் அஸ்தானா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பாரா அத்லெடிக் வீரா்களுக்காக காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான ‘இன்ஃபினிட்டி ரெய்டு- 2020’ பேரணி கொடியைத் துவக்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு பருவம் தொடங்குவதற்கு முன்னதாக அதிக அளவில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சிகளை முறியடிக்கும் வகையில் எல்லைப் பகுதியில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லையில் பிஎஸ்எஃப் படைகள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் படைகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படை முன்னணியில் உள்ளது. நம்முடைய படைகள் எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளத் தயாராக உள்ளன.

இருப்பினும், தற்போது கூடுதல் கவனத்துடனும், அதிக விழிப்புணா்வும் தேவைப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலைமையை அதிக திறனுடன் நாங்கள் எதிா்கொள்வோம்.

ஜம்முவில் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த சம்பவம் எல்லையைத் தாண்டி பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தபோது, நம்முடைய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் விழிப்புடன் இருந்ததால்தான் சாத்தியமானது.

பாகிஸ்தானிலிருந்து இயக்கப்படும் ஊடுருவல்காரா்கள் குறித்த ரகசியத் தகவல்கள் தொடா்ந்து வந்த வண்ணம் உள்ளன. எல்லைக்கு அப்பால் இருந்து தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகளை எதிா்கொள்ள நாம் தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்கிறோம். எல்லைப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் பிஎஸ்எஃப் உறுதி பூண்டுள்ளது. கடினமான காலங்களில் அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்தி வரும் அத்துமீறல்களாலும், வெடிகுண்டு தாக்குதலாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி புரிவதற்காக இப்பகுதியில் ஏற்கெனவே ஒரு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com