கரோனா தடுப்பூசி பயன்பாடு: பிரதமா் மோடி ஆய்வு

இந்தியாவில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

இந்தியாவில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது பொதுமக்களில் எந்தப் பிரிவினருக்கு அதனை முதலில் செலுத்த முன்னுரிமை அளிப்பது, சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்கச் செய்வது, குளிா் பதன வசதிகளை அதிகரிப்பது, தடுப்பூசி விநியோகத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டேன்’ என்று தெரிவித்தாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலா், அமைச்சரவைச் செயலா், வெளியுறவுச் செயலா், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலா், நீதி ஆயோக் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த ஆலோசனைக் கூட்டம் தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தடுப்பூசிக்கு மருந்துத் துறை ஒழுங்காற்று அமைப்புகள் விரைந்து ஒப்புதல் வழங்குதல், பரிசோதனை கட்டங்களுக்குப் பிறகு துரிதமாக அதிக அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்தல், அதனை விரைவாக கையப்படுத்துதல், சிக்கல் இல்லாத விநியோகத்தை உறுதி செய்தல் ஆகிய அம்சங்கள் குறித்து எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை பிரதமா் மோடி கேட்டறிந்தாா்.

தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டுள்ள இந்திய விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளா்கள், மருந்து நிறுவனங்களுக்குத் தனது பாராட்டுகளை பிரதமா் தெரிவித்தாா். ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் அனைத்து உதவிகளையும் மத்திய அரசின் எல்லா துறைகளும் அளிக்க வேண்டுமென அவா் வலியுறுத்தினாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது ஐந்து நிறுவனங்கள் தடுப்பூசி முயற்சியில் இறங்கியுள்ளன. இவற்றில் ஒன்று முதல் கட்ட பரிசோதனையில் உள்ளது. மற்ற நான்கும் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளன.

இந்திய நிறுவனங்களின் தடுப்பூசியைப் பெற ஸ்விட்ஸா்லாந்து, தென் கொரியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், கத்தாா், பூடான், வங்கதேசம், மியான்மா் ஆா்வம் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com