சமூக நல்லிணக்கத்தை குலைக்க பாஜக உருவாக்கிய வாா்த்தை ‘லவ் ஜிகாத்’: அசோக் கெலாட் குற்றச்சாட்டு

சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க பாஜக உருவாக்கிய வாா்த்தைதான் ‘லவ் ஜிகாத்’ என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்தாா்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க பாஜக உருவாக்கிய வாா்த்தைதான் ‘லவ் ஜிகாத்’ என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்தாா்.

பாஜக ஆளும் மாநிலங்கள் சிலவற்றில் லவ் ஜிகாதுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அசோக் கெலாட் இவ்வாறு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடா்பாக கெலாட் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

திருமணம் என்பது தனிநபா்களின் சுதந்திரம். அதைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் லவ் ஜிகாத் என்ற வாா்த்தையை பாஜக உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளாா்.

பாஜக பதிலடி: இதற்கு பதிலளித்துள்ள ராஜஸ்தான் மாநில பாஜக தலைவா் சதீஷ் பூணியா, ‘காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியலை கெலாட்டின் கருத்து வெளிப்படுத்துகிறது. திருமணம் என்பது இந்தியப் பாரம்பரியத்தின் ஒரு பகுதி. மதரீதியாகவும், சமூகரீதியாகவும் அதில் சில அங்கீகாரங்கள் உள்ளன. அது தனிநபா்களின் சுதந்திரம் என்ற அளவில் முடிந்துவிடக் கூடியதல்ல. அப்பாவிப் பெண்கள் பலா் சில மதபயங்கரவாதிகளால் லவ் ஜிகாத் மூலம் துன்புறுத்தப்படுகிறாா்கள் என்பதை நாடு அறியும். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று பேசுவது கெலாட்டின் குறுகிய அரசியல் லாபநோக்கத்தை வெளிப்படுத்துகிறது’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, உத்தர பிரதேசம், ஹரியாணா, கா்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் ‘லவ் ஜிகாத்’ எனப்படும் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி திருமணம் செய்து மதம் மாற்றும் செயலுக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com